பள்ளியின் ஆசிரியரை அந்த பள்ளியின் புள்ளிங்கோ ஸ்டைல் மாணவன் ஒருவன் பீர் பாட்டிலால் பாய்ந்து தாக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

சேலம் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

“கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக” 

- என்ற வள்ளுவ பெருந்தகையின் குறளுக்கு, 

“கற்பதற்குத் தகுதியான நூல்களைப் பழுதில்லாமல் கற்க வேண்டும்; கற்றதன் பின்னர் கற்ற அக்கல்வியின் தகுதிக்குத் தகுந்தபடி நடக்கவும் வேண்டும்” என்று, புலியூர்க் கேசிகன் புதிய உரை எழுதியிருக்கும் நிலையில், 

“பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும், கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்” என்று, முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியும், இதற்கு விளக்கம் அளித்திருக்கிறார்கள்.

ஆனால், இந்தியாவின் இன்றைய கல்விச் சூழலில் நடப்பதே வேறு விதமாக இருக்கிறது.

அதாவது, சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்து உள்ள மஞ்சினி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் “புள்ளிங்கோ ஸ்டைலில்” தலைமுடி வெட்டாமல் பள்ளிக்கு வந்ததாக தெரிகிறது. 

இப்படியாக  “புள்ளிங்கோ ஸ்டைலில்” தலைமுடி வெட்டாமல் பள்ளிக்கு வந்த குறிப்பிட்ட அந்த மாணவனை பார்த்த அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், இது குறித்து அந்த மாணவனை அழைத்து கண்டித்து உள்ளார்.

அத்துடன், “நாளை வரும் பொழுது, முறையாக தலைமுடியை வெட்டிவிட்டு வரும்படியும்” அந்த தலைமை ஆசிரியர் கூறியிருக்கிறார்.

இதனால், அந்த புள்ளிங்கோ மாணவன், அந்த தலைமை ஆசிரியருடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருக்கிறான்.

மேலும், அங்கு இருந்த ஒரு மேஜையின் மீது இருந்த பொருட்களை கீழே தள்ளி அந்த மாணவன் உடைத்ததாகவும் கூறப்படுகிறது. 

இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதால் அங்கு சத்தம் கேட்டு மற்ற வகுப்பு ஆசிரியர்களும் அங்கு வந்து உள்ளனர்.

அப்போது, தலைமை ஆசிரியரிடம் ரகளையில் ஈடுபட்ட அந்த மாணவனை சக ஆசிரியர்கள் சமாதான படுத்திய நிலையில், இது குறித்து பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இது குறித்து விரைந்து வந்த அவர்கள், அந்த பள்ளி மாணவனிடம் “உன் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வரும்படி” கூறி உள்ளனர்.

அதன்படியே, அந்த மாணவனும் தனது பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வந்த நிலையில், பள்ளியில் நடந்த இந்த சம்பவம் பற்றியும், அந்த மாணவனை பற்றியும் தலைமை ஆசிரியர் புகாராக தெரிவித்து வந்தார்.

அப்போது, அந்த 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் தனது பையில் இருந்து ஒரு காலியான பீர் பாட்டிலை எடுத்து, அதனை உடைத்ததுக்கொண்டு எதிரே நின்றிருந்த அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரை பாட்டிலால் குத்த பாய்ந்து உள்ளான். 

உடனடியாக, அங்கு கூடி நின்ற சக சக ஆசிரியர்கள் சுதாரித்த நிலையில், அந்த மாணவனை தடுத்து நிறுத்தி அவனது கையில் இருந்து பாட்டிலை பிடிங்கிகொண்டனர். 

அத்துடன், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த ஆத்தூர் போலீசார், இந்த சம்பவம் குறித்து தொடர்ந்த விசாரணை நடத்தினர். 

குறிப்பாக, தலைமை ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்க முயன்ற அந்த மாணவனை அங்குள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டது.