4 நாள் பயணமாக இன்றிரவு டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் தமிமுக ஆளும் கட்சியாகவும், அதிமுக எதிர் கட்சியாகவும் இருந்து வருகிறது.

ஆனால், அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தாலும், அதிமுகவையும் மீறி, பாஜக எதிர்கட்சியைப் போல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாகவே, “தைரியம் இருந்தால் தன்னை அடுத்த 6 மணி நேரத்திற்குள் கைது செய்யுங்கள்” என்று, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்றைய தினம் தமிழக ஆளும் கட்சியான திமுக அரசுக்கு ஓப்பனாகவே பெரும் சவால் விடுத்திருந்தார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் இந்த பேட்டி, தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. 

இந்த நிலையில் தான், டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் திமுக அலுவலகமான “அண்ணா - கலைஞர் அறிவாலய திறப்பு விழா” வரும் 2 ஆம் தேதி நடைபெற இருப்பதால், இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

அதன் படி, டெல்லியில் நாளைய தினம் பிற்பகல் நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார்.

இந்த சந்திப்பின்போது, தமிழகத்தின் வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும், அவர் பிரதமரிடம் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

அத்துடன், டெல்லியில் ஏப்ரல் 2 ஆம் தேதி புதிதாக திறக்கப்படும் “அண்ணா - கலைஞர் அறிவாலய திறப்பு விழாவில்” பங்கேற்கும் விதமாக, பிரதமர் நரேந்திர மோடியை அழைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிரதமர் உடனான இந்த சந்திப்பின் போது, பாஜக தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை பற்றி சில புகார்கள் தெரிவிக்கலாம் ஒன்றும் ஒரு பக்கம் பேச்சுக்கள் அடிப்படுகிறது. ஆனால், இதில் துளியும் உண்மை இல்லை என்றும் இன்னொரு பக்கமும் கூறப்படுகிறது.

மேலும், நாளை மாலை மத்திய அமைச்சர்களான அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின்கட்காரி ஆகியோரையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக, ஏப்ரல் 1 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் மிக முக்கிய மற்றும் மூத்த தலைவர்களையும் சந்தித்து பேசுகிறார். 

அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 2 ஆம் தேதி, டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட திமுக அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

இதனால், “4 நாட்கள் டெல்லியை மையம் கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின், இந்த பயணம் அதிக அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.