நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அதிமுக வேட்பாளர் ஒரு ஓட்டுக்கூட வாங்காமல் படு தோல்வியை அடைந்திருக்கும் நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரும் ஒரு ஓட்டு கூட பெறாமல், படுதோல்வி அடைந்துள்ளது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி பேரூராட்சி 7 வது வார்டில், அதிமுக சார்பில் முகமது இப்ராம்சா என்பவர் போட்டியிட்டார்.

அதன் படி, இன்றைய தினம் கரம்பக்குடி பேரூராட்சி 7 வது வார்டில் பதிவான வாக்குகள் காலை முதல் எண்ணப்பட்டு வந்தன. 

இதில், 179 வாக்குகளை பெற்ற சுயேட்சை வேட்பாளர் பிரிதிவி ராஜா என்பவர், அபார வெற்றி பெற்றார். 

அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் பரூக் என்பவர், 149 வாக்குகள் பெற்றார். இதற்கு அடுத்தப்படியாக, அங்கு போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் அப்துல் கரீம் என்பவர் 135 வாக்குகள் பெற்றனர்.

அதே போல், அங்கு போட்டியிட்ட மற்ற வேட்பாளர்கள் டெபாசிட் கூட வாங்கவில்லை. 

அத்துடன், அங்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பீர் முகமது என்பவர் வெறும் 4 வாக்குகள் மட்டுமே பெற்றார். 

குறிப்பாக, அதிமுக சார்பில் அங்கு போட்டியிட்ட முகமது இப்ராம்சா மற்றும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட தர்மராஜ் ஆகிய இருவரும் அங்கு ஒரு வாக்கு கூட பெறவில்லை.

அதாவது, அதிமுக வேட்பாளர் முகமது இப்ராம்சாவின் அண்ணன் அதிமுகவில் கரம்பக்குடி நகர செயலாளராக இருக்கிறார் என்பது முக்கிய விசயமாக இருந்தாலும், அவர் அங்கு போட்டியிட்டு ஒரு வாக்குகள் கூட பெற வில்லை என்பது, அந்த பகுதி அதிமுகவினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதே போல், சிவகங்கை நகராட்சியின் 1 வது வார்டில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளருக்கு ஒரு வாக்குகள் கூட பதிவாகவில்லை என்றும், செய்திகள் வெளியாகி உள்ளன.

அதாவது, சிவகங்கை நகராட்சிக்கான தேர்தலில் மொத்தம் உள்ள 27 இடங்களில் திமுக 11 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 3 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளன. 

அத்துடன், அங்கு அதிமுக 5 இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 5 இடங்களிலும், அமமுக 3 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளன. 

இதன் மூலமாக, சிவகங்கை நகராட்சியை திமுக கூட்டணி அதிகம் கைப்பற்றி இருக்கிறது.

இதில், சிவகங்கை 1 வது வார்டில் திமுக வேட்பாளர் மகேஷ்குமார் 434 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் செங்கோல் ஒரு வாக்குகளை கூட பெறவில்லை என்பது, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.