2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வகையில் இளம் தலைமுறையினரான 21, 22, 23 வயதான கல்லூரி மாணவிகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் வெற்றி வாகை சூடி, பலரது கவனத்தையும் தங்கள் பக்கம் ஈர்த்து உள்ளனர்.

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் என 648 நகரப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தலுக்கான வாக்குப் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. 

இதில், ஆயிரத்து 369 மாநகராட்சி கவுன்சிலர், 3 ஆயிரத்து 824 நகராட்சி கவுன்சிலர், 7 ஆயிரத்து 409 பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 602 பதவி இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், பல்வேறு தொகுதிகளுக்கு முடிவுகள் ஒன்றன் பின் ஒன்றாக அறிவிக்கப்பட்டு வரகிறது.

அதன் படி, இந்த தேர்தலில் 21, 22 வயது கல்லூரி மாணவி, பொறியியல் பட்டதாரி, 4000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற இளம் வேட்பாளர் என்று, பலரும் வெற்றி வாகை சூடி உள்ளனர். 

அந்த வகையில், இந்த தேர்தலில் வெற்றிப் பெற்ற இளம் வேட்பாளர்கள் பற்றி தற்போது பார்க்கலாம்.

21 வயது இளம் வேட்பாளர் வெற்றி!

- ஆரணியில் திமுக சார்பில் போட்டியிட்ட 21 வயது இளம் வேட்பாளரான கல்லூரி மாணவி ரேவதி அமோக வெற்றி பெற்று பலரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்து உள்ளார்.

22 வயது சட்டக் கல்லூரி மாணவி வெற்றி!

- ஓசூர் மாநகராட்சி 13 வது வார்டில், திமுக வேட்பாளராக களம் கண்ட சட்டக் கல்லூரி 3 ஆம் ஆண்டு படிக்கும் மாணவி 22 வயதான யஷாஸ்வினி, அபார வெற்றி பெற்று உள்ளார். இவர், மொத்தமாக 1146 வாக்குகள் பெற்று உள்ளார். அத்துடன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை 640 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளார்.

பட்டதாரி மாணவி வெற்றி!

- திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சி 5 வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய 22 வயது இளம் பொறியியல் பட்டதாரியான சினேகா, என்ற மாணவி அமோகமான முறையில் வென்று உள்ளார். இதனால், அந்த ஊர் மக்கள் மத்தியில் தற்போது அவர் பேசும் பொருளாக மாறியிருக்கிறார்.

கவுன்சிலராக 22 வயது இளம் பெண்!

- சென்னை கோடம்பாக்கம் மண்டலத்தில் உள்ள 136 வது வார்டில் 22 வயது இளம் பெண்ணான நிலவரசி துரைராஜ், இந்த தேர்தலில் வெற்றி பெற்று உள்ளார். இதனால், சென்னை மாநகராட்சியில் சாதித்துகாட்டிய  22 வயது இளம் கவுன்சிலர் என்னும் அந்தஸ்தை அவர் பெற்று உள்ளார். குறிப்பிட்ட இந்த வார்டில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை விட, விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் அதிக வாக்குகளை பெற்று உள்ளார். அந்த வகையில், விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த அறிவுச் செல்வி 5,112 வாக்குகள் பெற்று உள்ளார். மேலும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வேட்பாளர் லட்சுமி கோவிந்தசாமி 1137 வாக்குகள் மட்டுமே பெற்று உள்ளார். விஜய் மக்கள் இயக்க வேட்பாளரை விட அதிமுக வேட்பாளர் குறைந்த வாக்குகளை பெற்றுள்ளது இங்கு, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முக்கியமாக, பி.காம் படித்து உள்ள நிலவரசி துரைராஜின் தந்தையும், திமுகவை சேர்ந்தவர். “திமுக இளைஞரணி தலைவரும், சேப்பாக்கம்  தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தான் எனது அரசியல் ரோல்மாடல்” என்று, நிலவரசு துரைராஜ் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இளம் வேட்பாளர் வெற்றி!

- நாகர்கோவில் மாநகராட்சி 17 வது வார்டில் திமுக வேட்பாளரான இளம் பெண், அபார வெற்றி பெற்று உள்ளார். அதுவும், இந்த இளம் பெண் கிட்டதட்ட 4000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற இளம் வேட்பாளர் என்ற பெருமையையும், அவர் பெற்று உள்ளார். இதனால், திமுக தலைமையின் கவனத்தை இந்த இளம் பெண் தன் பக்கம் திருப்பி உள்ளார். அதாவது, சென்னை மாநகராட்சியான 99 வது வார்டில், திமுக வேட்பாளர் பரிதி இளம் சுருதி, 4000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். குறிப்பாக, அதிமுக வேட்பாளராக களமிறங்கிய முன்னாள் ஐஏஎஸ் சிவகாமியை, பரிதி இளம் வழுதியின் மகன் பரிதி இளம்சுருதி, வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.