தமிழ் திரை உலகில் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் மோகன்தாஸ். இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கத்தில் சைக்கோ த்ரில்லர் படமாக வெளிவர உள்ள மோகன்தாஸ் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதனை அடுத்து விஷ்ணு விஷால் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் கட்டா குஸ்தி. வெண்ணிலா கபடி குழு ஜீவா என விஷ்ணு விஷால் நடிப்பில் விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்து சூப்பர் ஹிட்டான திரைப்படங்களின் வரிசையில் பாரம்பரியமான கட்டா குஸ்தி சண்டையை மையப்படுத்தி இத்திரைப்படம் தயாராகி வருகிறது.

தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் RT டீம் வொர்க்ஸ் மற்றும் விஷ்ணு விஷாலின் விஷ்ணுவிஷால் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்க, தமிழில் கட்டா குஸ்தி & தெலுங்கில் மட்டி குஸ்தி என இரு மொழிகளில் தயாராகும் இத்திரைப்படத்தில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து  ஐஸ்வர்யா லெக்ஷ்மி கதாநாயகியாக நடிக்க,  முனீஸ்காந்த் ,லிஸ்ஸி ஆண்டனி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கும் கட்டா குஸ்தி திரைப்படத்திற்கு ரிச்சர்ட்.M.நாதன் ஒளிப்பதிவில், ஜஸ்டீன் பிரபாகரன் இசையமைக்கிறார். கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்டு இதுவரை 80 சதவீத படப்பிடிப்பு நிறைவு பெற்ற கட்டா குஸ்தி படத்தின் படப்பிடிப்பு சில நாட்களாக கேரளாவில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கேரளாவில் நடைபெற்று வந்த கட்டா குஸ்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கேரள படப்பிடிப்பை நிறைவு செய்வதையும், இயக்குனர் செல்லா அய்யாவுவின் பிறந்தநாளை முன்னிட்டும் கட்டா குஸ்தி படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.