சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் சட்டக் கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில், கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் நசீமா மீது மனித உரிமை நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி தமிழக போலீசார் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, சென்னை வியாசர்பாடி புது நகரை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம் என்பவர், “முகக் கவசம் அணியவில்லை” என்று கூறி, போலீசார் அவருக்கு அபராதம் விதித்தனர்.

அப்போது, அந்த சட்டக் கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம், அந்த அபராத தொகையை போலீசாரிடம் செலுத்த மறுத்ததாக கூறப்படுகிறது. 

இதன் காரணமாக, அங்கு இருந்த சக போலீசாரான உத்தரகுமாரை தாக்கியதாகவும், போலீசார் தரப்பில் புதிய குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

இப்படியான குற்றச்சாட்டுக்கள் சட்டக் கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம் மீது சுமத்தப்பட்டதை அடுத்து, இந்த குற்றச்சாட்டில் மாணவர் அப்துல் ரஹீமை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

பின்னர், கைது செய்யப்பட்ட மாணவன் அப்துல் ரஹீமை, போலீசார் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் அழைத்துச் சென்று, அவரை மிக கடுமையாக தாக்கி, தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது.

சட்டத்தைக் காக்க வேண்டிய போலீசாரே, இப்படி சட்டத்தை மீறி, மனித் தன்மையற்று நடந்துகொண்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பொது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, இதனைப் பார்த்த பொது மக்கள் பலரும் போலீசாருக்கு எதிராக மிக கடுமையாக வசைப்பாடத் தொடங்கி, தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இது, ஒட்டுமொத்த போலீசாருக்கும் கடுமையான அவப் பெயரை ஏற்படுத்தியது.

அத்துடன், ஒரு மாணவனையே போலீசார் இப்படி துன்புறுத்துகிறார் என்றால், மற்றவர்களை போலீசார் எப்படி நடத்துவார்கள் என்கிற விமர்சன குரல்களும் போலீசாருக்கு எதிராக எழுந்த நிலையில், கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் நசீமா தலைமையிலான போலீசார் மீது தற்போது மனித உரிமை தொடர்பாகவும் கருத்துக்களும், விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், போலீசாரால் சட்டக் கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில், முதலில் தலைமைக் காவலர் பூமிநாதன் மற்றும் காவலர் உத்தர குமார் ஆகிய இருவர் மட்டுமே சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனால், மற்ற போலீசார் இந்த சம்பத்தில் தப்பித்துக்கொண்டனர் என்கிற குற்றச்சாட்டும் எழுந்தது.

அதன் தொடர்ச்சியாக, கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் நசீமா, ராஜன் உள்ளிட்ட 9 பேர் மீது முன்னதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

இதனையடுத்து, கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் நசீமா தலைமையிலான போலீசார் மீது தொடர்ந்து கண்டனங்கள் எழுந்த நிலையில், தற்போது இன்ஸ்பெக்டர் நசீமா தலைமையிலான போலீசார் மீது  மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்து உள்ளது.

குறிப்பாக, சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம் தாக்கப்பட்டது தொடர்பாக, உள்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்யவும் தற்போது அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 

மிக முக்கியமாக, “சட்டக்கல்லூரி மாணவனை, சக போலீசார் தாக்கியது தொடர்பான அந்த சிசிடிவி பதிவுகளை பாதுகாக்க வேண்டும்” என்றும், சென்னை காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.

இதனால், போலீசாரால் மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் நசீமாவே முழு பொறுப்பேற்க வேண்டி உள்ளதால், அவர் மீது கடும் நடவடிக்கை பாயும் என்றும் தகவல்கள் வெளியாகி, சக போலீசார் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.