“முழு ஊரடங்கில் பயணிகளின் நலன் கருதி சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் ஆட்டோக்கள், செயலி மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும் வாடகை கார்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதி உண்டு” என்று,  தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வகை வைரஸ் நோய்த் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

அதன்படி, கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, ஞாயிற்றுக் கிழமை தோறும் முழு ஊரடங்கும், மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கும் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

எனினும், சென்னை நகரில் கிட்டதட்ட 10 ஆயிரம் தெருக்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

இதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வரும் 23 ஆம் தேதி ஞாயிற்று கிழமை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

என்றாலும், முழு ஊரடங்கு நாளில் கடந்த ஞாயிற்றுக் கிழமைகளில் பல அத்தியாவசிய செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு வந்தன.

இப்படியாக, கடந்த 2 ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், 23 ஆம் தேதி நாளை மறு நாளும் முழு நேர ஊரடங்கு தமிழகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட உள்ளன.

இந்த சூழலில் தான், “கடந்த 16 ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்ட அத்தியாவசிய செயல்பாடுகள் வருகிற 23 ஆம் தேதியும் அனுமதிக்கப்படும் என்றும், இந்த முழு ஊரடங்கு நாட்களில் முன்பு நடைமுறைப்படுத்தப்பட்ட அத்தியாவசிய செயல்பாடுகள் அனைத்திற்கும் தற்போது அனுமதி அளிக்கப்படும்” என்றும், தமிழக அரசு அறிவித்து உள்ளது.

அத்துடன், “பயணிகள் அனைவரும் ஆட்டோக்கள், வாடகை கார்களில் செயலி வழியே முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளலாம் என்றும், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்கம் போல் ஆட்டோக்கள் இயக்கப்படும்” என்றும், தமிழக அரசு தற்போது அறிவித்து உள்ளது.

அதே போன்று, “தமிழகத்தின் அனைத்து மாவட்ட ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலும் வழக்கம் போல் ஆட்டோக்கள் இயக்கப்படும்” என்கிற புதிய அறிவிப்பையும், தமிழக அரசு அறிவித்து உள்ளது.

அதே நேரத்தில், “கடந்த ஞாயிற்று கிழமை தடை செய்யப்பட்ட அனைத்து செயல்பாடுகளுக்கான தடைகள் யாவும், வருகிற 23 ஆம் தேதியும் தொடரும்” என்றும், தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

மேலும், 'கொரோனா நோய் தொற்றிலிருந்து பொது மக்களைக் காத்திட, தமிழக அரசு மேற்கொள்ளும் இந்த நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு” தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டு உள்ளார்.