இந்திய திரை உலகின் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், ராக்கி படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் முதல் முறை நடிகராக களமிறங்கும் இயக்குனர் செல்வராகவன் உடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சாணிக் காயிதம் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

மேலும் இயக்குனர் சிவா இயக்கத்தில் தமிழில் அஜித் குமார் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான வேதாளம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் போலா ஷங்கர் படத்தில் சிரஞ்சீவியின் தங்கையாக நடித்து வரும் கீர்த்தி, மகேஷ்பாபு கதாநாயகனாக நடித்து வரும் சர்க்கார் வாரி பாட்டா படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

முன்னதாக மலையாளத்தில் நடிகர் டோவினோ தாமஸ் உடன் இணைந்து கீர்த்தி நடித்து வந்த வாஷி படத்தின் படப்பிடிப்பும் தற்போது நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கீர்த்தி சுரேஷ் சிலதினங்களுக்கு முன் வைரஸ் தொற்றிலிருந்தது மீண்டு வந்தார் . இதனிடையே கீர்த்தியின் குட் லக் சகி படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது.

இயக்குனர் நாகேஷ் குக்குன்னூர் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள குட் லக் சகி திரைப்படத்தில் நடிகர்கள் ஜெகபதி பாபு மற்றும் ஆதி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வொர்த் எ ஷாட் மோஷன் ஆர்ட்ஸ் தயாரிப்பில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் வெளியிடும் குட் லக் சகி படத்திற்கு சிரத்தன் தாஸ் ஒளிப்பதிவு செய்ய, தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். 

கீர்த்தி சுரேஷின் குட் லக் சகி திரைப்படம் வருகிற ஜனவரி 28 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .