சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று, ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குரல் எழுந்துள்ள நிலையில், சசிகலாவுடன் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா சந்தித்து பேசி உள்ளது, அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“அதிமுகவில் சசிகலாவையும் சேர்த்துக்கொண்டு கட்சியை பலப்படுத்த வேண்டும்” என்கிற தீர்மானம், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெரியகுளத்தில் நடந்த கூட்டத்தில் தேனி மாவட்ட அதிமுகவினர் தீர்மானம் நிறைவேற்றினார்கள். அதன் தொடர்ச்சியாக, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டியும் இதனையே வலியுறுத்தி தனது கருத்தை தெரிவித்தார். 

இதனையடுத்து, “அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒரே குடும்பம் போன்றவர்கள்” என்று, சென்னை விமான நிலையத்தில் சசிகலா உருக்கமாக பேசினார். 

இப்படியாக, சசிகலாவை அதிமுகவிற்கு நெருக்கமாகிக்கொண்டிருக்கும் நிலையில், சசிகலாவை அதிமுகவில் சேர்த்து ஆக வேண்டும் வேண்டும் என்கிற குரல்கள் அக்கட்சிக்குள் தற்போது பலமாக எழுந்திருக்கிறது.
 
இந்த சூழலில் தான், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து அந்த பகுதியில் உள்ள பல்வேறு கோயில்களில் சாமி தரிசனம் செய்து வருகிறார். 

இதற்காக நேற்ற காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக, தூத்துக்குடி சென்றார். பின்னர், திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்வதற்காக சென்ற சசிகலா, அங்கு தங்கியிருந்தார். 

இந்த நிலையில் தான், திருச்செந்தூரில் சசிகலாவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, நேற்று மாலை திடீரென்று சந்தித்துப் பேசினார்.

அதாவது, “சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்க்க வேண்டும்” என்கிற, குரல் மீண்டும் எழுந்து உள்ள நிலையில் தான், சசிகலாவை ஓ. ராஜா சந்தித்து பேசியிருக்கிறார். 

தேனி மாவட்ட அதிமுகவினர் சசிகலாவை கட்சியில் சேர்க்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் தான், இந்த சந்திப்பு நடந்திருக்கிறது என்றும், அதிமுகவினர் கூறுகின்றனர். 

இப்படியாக, சசிகலாவை ஓபிஎஸ் சகோதரர் ஓ. ராஜா சந்தித்து ஒரு பக்கம் பேசியிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம், நேற்று மாலை ஒபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் தனிதனியே தங்களது ஆதரவாளர்களுடன் சசிகலா விவகாரம் பற்றி ஆலோசனை நடத்தியதாகவும் அதிமுகவில் கிசுகிசுக்கப்படுகிறது. 

இதனால், சசிகலா எந்த நேரத்திலும் அதிமுகவில் மீண்டும் இணையலாம் என்றும், அதற்கான காலம் தற்போது கணிந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 

இதனிடையே, சசிகலா அதிமுகவில் இணையும் விவகாரம், அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பாப பேசப்பட்டு வருகிறது.