ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்குப் பிறகு அஜித் குமார் நடித்த வலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. காவல்துறை அதிகாரியாக அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படத்தை போனி கபூரின் பே வியூ ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்டபார்வை படங்களின் இயக்குனர் H.வினோத் இயக்கினார்.

அதிரடியான ஸ்டன்ட் காட்சிகள் நிறைந்த வலிமை திரைப்படத்திற்கு திலிப் சுப்புராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்ற, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்தார். யுவன்ஷங்கர் ராஜாவின் பாடல்களிலும் ஜிப்ரானின் பின்னணி இசையிலும் வெளிவந்த வலிமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆகியுள்ளது.

இதனிடையே வலிமை திரைப்படம் ரிலீஸான கோயமுத்தூரில் கங்கா திரையரங்கில் ரிலீஸ் தினத்தன்று அதிகாலை மர்ம நபர் பெட்ரோல் குண்டை வீசி சென்றார். இதனை அடுத்து திரையரங்கின் அருகில் உள்ள சிசிடிவி கேமரா உதவியுடன் காவல்துறையினர் விசாரணையை தொடங்கிய நிலையில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபரை தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலியை சேர்ந்த 21 வயதான லக்ஷ்மனன் கோயம்புத்தூரில் உள்ள இரத்தினபுரியில் வசித்து வருகிறார். பெயிண்டராக வேலை பார்க்கும் லக்ஷ்மனன் அதே பகுதியில் அஜித் ரசிகரான நவீன்குமாரிடம் வலிமை திரைப்படத்திற்கான 4:00am சிறப்பு காட்சி டிக்கெட் கேட்டபொழுது ஒரு டிக்கெட்டின் விலை 500 ரூபாய் என சொன்னதால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து லக்ஷ்மணனும் அவரது நண்பர்களும் அங்கே சில பைக் ஸ்டண்ட்  செய்ததில் நவீன்குமாரின் நண்பர் ஒருவருக்கு அடிபட்டுள்ளது. இதனையடுத்து நவீன் குமார் மற்றும் அவரது நண்பர்கள், லக்ஷ்மனன் மற்றும் அவரது நண்பர்களை அடித்து விரட்ட அங்கிருந்து தப்பித்த லக்ஷ்மணன் 4:00 சிறப்பு காட்சியின் சமயத்தில் திரையரங்கில் குண்டு வீசி சென்றுள்ளார்.

மேலும் போலீசாரிடமிருந்து தப்பிக்க தலைமறைவாக லக்ஷ்மணன் மற்றும் அவரது நண்பர்கள் நீலகிரியின் சேரம்பாடி பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் லக்ஷ்மணனை போலீசார் கைது செய்துள்ளதாகவும் அவரது நண்பர்களை தேடி வருவதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைத்துள்ளன.