கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்ட கூடுதல் தளர்வுகள் தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வருவதால் நர்சரி பள்ளிகள் திறக்கப்பட்டன. 

kids schools

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்தில் ஆல்ஃபா, இந்தியாவில் டெல்டா, தென் ஆப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. அதற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கொரோனா அலை கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலின் 3-வது அலை உச்சத்தை எட்டியபோது இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என அடுக்கடுக்கான பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்தது. இதன் காரணமாக நோய் பரவல் சங்கிலி உடைக்கப்பட்டு, பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.

மேலும் இதற்கிடையே கடந்த 12-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில், ஊரடங்கை அடுத்த மாதம் மார்ச் 2-ம் தேதி வரையிலும் நீட்டித்து உத்தரவிடப்பட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், நோய்த்தாக்கம் குறைந்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தி கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய தளர்வுகள் இன்று முதல் தமிழகத்தில் அமலுக்கு வருகிறது.

அதனைத்தொடர்ந்து முந்தைய ஊரடங்கில் திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தநிலையில், தற்போது அதிகபட்சம் 200 பேர் பங்கேற்கலாம். இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தநிலையில், தற்போது 100 பேருக்கு மிகாமல் அனுமதிக்கப்படுவார்கள். இதை தவிர்த்து முன்பு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் இடம்பெற்றிருந்த பிற கட்டுப்பாடுகளையும் விலக்கிக்கொள்வதாக அரசு அறிவித்துள்ளது. இதனால் எல்.கே.ஜி., யு.கே.ஜி. போன்ற நர்சரி பள்ளிகள், மழலையர் விளையாட்டு பள்ளிகள் இன்று முதல் திறக்கப்படுகின்றன. சமுதாய, கலாசார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நடத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளன.

மேலும் பொருட்காட்சிகள் நடத்தவும், அரசு மற்றும் தனியார் சார்பில் நடத்தப்படும் கலை விழாக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஓட்டல்கள், விடுதிகள், பேக்கரிகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 100 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு சாப்பிடலாம். தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்கள் படம் பார்க்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து துணிக்கடைகள், நகைக்கடைகள், உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள் வாடிக்கையாளர்களுடன் முழுமையாக செயல்படவும், உள் விளையாட்டு அரங்குகள், உள் அரங்குகளில் நடத்தப்படும் கருத்தரங்குகள், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகள், அழகு நிலையங்கள், சலூன்கள், அனைத்து பொழுதுபோக்கு கேளிக்கை பூங்காக்கள் முழுவதுமாக இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தியேட்டர்களில் அனைத்து இருக்கைகளிலும் பார்வையாளர்கள் அமர்ந்து படம் பார்க்க அனுமதி, நர்சரி பள்ளிகள் திறப்பு, ஓட்டல்களில் இருக்கைகள் முழுவதிலும் அமர்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி, துணிக்கடைகள், நகைக்கடைகள், சலூன்கள் முழுமையாக வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம் போன்ற பல்வேறு புதிய உத்தரவுகள் காரணமாக தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பும் சூழல் வந்துள்ளது.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் வழக்கமான நிலை திரும்புவதால் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கொரோனாவுக்கு கடிவாளம் போடுவது பொதுமக்களின் கையில்தான் இருக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றினால் மீண்டும் ஊரடங்கு என்ற நிலையே இருக்காது என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.