தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலை விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. போலீசார் முறைப்படி வழக்குப்பதிவு செய்து நேற்று விசாரணையை தொடங்கி விட்டனர்.

student lavanya

தஞ்சை மாவட்டம், மைக்கேல் பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தவர் 17 வயது மாணவி லாவண்யா.  இவர் அரியலூர் மாவட்டம், வடுகபாளையத்தைச் சேர்ந்தவர். பள்ளி விடுதியில் தங்கி இவர் படித்து வந்தார்.  இந்நிலையில் பள்ளி நிர்வாகமும், விடுதி காப்பாளர்களும் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், இதனாலேயே விஷம் குடித்ததாகவும் மாணவி லாவண்யா கூறுவது போன்ற வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அதனைத்தொடர்ந்து குடும்ப சூழ்நிலையால் பள்ளிக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும், பள்ளி விடுதி காப்பாளர் தன்னை அதிக வேலை வாங்குவதாகவும் இதனால் படிப்பில் கனம் செலுத்த முடியாமல் குறைவான மதிப்பெண் எடுத்ததால் சரியாக படிக்க முடியாது என நினைத்து தான் விஷம் குடித்ததாகவும் மாணவி லாவண்யா கூறும் மற்றொரு வீடியோ வெளியானது. மேலும் இந்த விவகாரத்தில் மதம் சார்பான பிரசாரங்கள் தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் செய்யப்படவில்லை. மாணவி லாவண்யா தற்கொலைக்கு கட்டாய மதமாற்ற துன்புறுத்தல் காரணம் கிடையாது என மாவட்ட கல்வி அலுவலர் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 

மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறும்படி கட்டாயப்படுத்தியதால், மனம் உடைந்த மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சில வீடியோ பதிவுகளும் வெளியானது. திருக்காட்டுப்பள்ளி போலீசார் மாணவி லாவண்யா தற்கொலை செய்தது தொடர்பாக முதலில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பள்ளி விடுதி வார்டன் சகாயமேரி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்தார். இந்த வழக்கை சி.பி.ஐ. போலீஸ் விசாரணைக்கு மாற்ற வேண்டும், என்று பா.ஜ.க. மற்றும் சில அமைப்புகள் போராட்டம் நடத்தினார்கள்.

இந்நிலையில் மாணவியின் தந்தை தொடர்ந்த வழக்கு அடிப்படையில், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க தடை இல்லை என்று தெரிவித்தது.  இதனால் இந்த வழக்கை சி.பி.ஐ. போலீசார் உடனடியாக விசாரிக்க தொடங்கி விட்டனர்.

சென்னை சி.பி.ஐ. துணை போலீஸ் சூப்பிரண்டு ரவி, மாணவி லாவண்யா தற்கொலை தொடர்பாக புதிதாக வழக்கு முதல் தகவல் அறிக்கை ஒன்றை 26 பக்கத்தில் பதிவு செய்துள்ளார். திருக்காட்டுப்பள்ளி போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை மேற்கோள்காட்டி சி.பி.ஐ. போலீசார் புதிய வழக்கை பதிவு செய்துள்ளனர். விடுதி வார்டன் சகாயமேரி, விடுதியை தினமும் சுத்தப்படுத்தச்சொல்லி தன்னை வற்புறுத்தி வேலை வாங்கியதாக, மாணவி லாவண்யா தனது வாக்குமூலத்தில் கூறியதாக, முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதாக அதில் கூறப்படவில்லை. சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை பிறப்பித்த உத்தரவு நகலும், சி.பி.ஐ. பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் கூறியபடி, சி.பி.ஐ. 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கை பதிவு செய்துள்ளது. இ.பி.கோ.305,511 மற்றும் 2015 குழந்தைகள் பாதுகாப்பு சட்டம், பிரிவுகள் 75,82 (1) ஆகியவற்றின் கீழ் புதிய வழக்கு போடப்பட்டுள்ளது. மாணவியின் பெற்றோர் மற்றும் விடுதி வார்டன் சகாயமேரி மற்றும் லாவண்யாவுடன் படித்த பள்ளி தோழிகள் உள்ளிட்டவர்களிடம் சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். மேலும் இது தொடர்பாக வெளியான வீடியோ பதிவுகளையும் சி.பி.ஐ. ஆராய உள்ளது. மாணவி லாவண்யா தற்கொலைக்கு உண்மையான காரணம் என்ன? என்பதை மையமாக வைத்து சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.