பாலிவுட் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராகவும் மிகச் சிறந்த பாடகராகவும் திகழ்ந்தவர் பப்பி லஹிரி. ஹிந்தி, பெங்காலி, தெலுங்கு, தமிழ், கன்னடம், குஜராத்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் இசையமைப்பாளராகவும் பாடகராகவும் பப்பி லஹிரி பல கோடி ரசிகர்களின் இதயங்களை கொள்ளை அடித்தவர்.

இந்திய திரையுலகில் 1970 - 80களில் டிஸ்கோ இசையை பிரபலப்படுத்திய பப்பி லஹிரியின் பாடல்கள் இன்றும் எவர்கிரீன் பாடல்களாக ஒலிக்கின்றன. கடைசியாக கடந்து 2020ஆம் ஆண்டு நடிகர் டைகர் ஷ்ராஃப் கதாநாயகனாக நடித்த பாகி 3 படத்தில் பங்காளி என்ற பாடலை பாடினார்.

தமிழ் சினிமாவில் இயக்குனர் தியாகராஜன் இயக்கத்தில் கார்த்திக், ராதா, சுஹாசினி மற்றும் ஊர்வசி ஆகியோர் இணைந்து நடித்த அபூர்வ சகோதரிகள், நடிகர் ஆனந்த் பாபு நடித்த பாடும் வானம்பாடி ஆகிய படங்களுக்கு பப்பி லஹிரி இசையமைத்துள்ளார். பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான டிஸ்கோ டான்சர் படத்தின் ரீமேக் ஆக தமிழில் உருவான பாடும் வானம்பாடி படத்தில் இடம்பெற்ற “நான் ஒரு டிஸ்கோ டான்சர்” தமிழ் இசை ரசிகர்களின் பேவரட் பாடலாக இருக்கிறது.

இந்நிலையில் இசையமைப்பாளரும் பாடகருமான பப்பி லஹிரி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இசையமைப்பாளர் பாடகர் பப்பி லஹிரியின் மறைவுக்கு கலாட்டா குழுமம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.
 
ஒரு மாத காலமாக உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இசையமைப்பாளர் பப்பி லஹிரி கடந்த திங்கட்கிழமை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நிலையில் மீண்டும் நேற்று(பிப்ரவரி 15) இரவு மூச்சுத் திணறல் ஏற்பட்டு  மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து சிகிச்சை பலனின்றி பப்பி லஹிரி காலமானார். அவருக்கு வயது 69. பப்பி லஹிரியின் மறைவுக்கு இந்திய திரை உலகமும் ரசிகர் பெருமக்களும் தங்களது  இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.