தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் அஜித் குமார் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் வலிமை. கடந்த ஜனவரி மாதம் பொங்கல் வெளியீடாக ரிலீசாக இருந்த வலிமை திரைப்படம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதனை அடுத்து வருகிற பிப்ரவரி 24 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகிறது வலிமை.

நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் H.வினோத் உடன் இணைந்துள்ள அஜித் நடிப்பில் தயாராகியிருக்கும் வலிமை திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவில் அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகியிருக்கும் வலிமை படத்திற்கு திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

முன்னதாக நடிகர்கள் பிரித்விராஜ் மற்றும் பிஜூ மேனன் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்து மெகா ஹிட்டான ஐயப்பனும் கோஷியும் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக தயாராகியுள்ள பீம்லா நாயக் திரைப்படத்தில் பவர்ஸ்டார் பவன் கல்யாண் மற்றும் ராணா டகுபதி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சாகர்.கே.சந்திரா இயக்கத்தில் சித்ரா என்டர்டெய்ன்மென்டஸ் தயாரித்துள்ள பீம்லா நாயக் படத்திற்கு தமன்.S இசையமைத்துள்ளார். பீம்லா நாயக் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் சங்கராந்தி வெளியீடாக ரிலீசாக இருந்த நிலையில் கோவிட் தொற்று காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது.

இந்நிலையில் பீம்லா நாயக் திரைப்படம் வருகிற பிப்ரவரி 25 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித்தின் வலிமை படம் பிப்ரவரி 24ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் அதற்க்கு போட்டியாக  பீம்லா நாயக் 25ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.