இன்று (செப் 29) காலை தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின் முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள் இங்கே :

* கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

* தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு இதுவரை ரூ.7,800 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

* கொரோனா சிகிச்சை மையங்களில் வசதிகள் சிறப்பாக உள்ளதா என ஆய்வு செய்ய ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

* தொழில்துறை வளர்ச்சிக்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

* வேளாண் உற்பத்தியை வரலாறு காணாத அளவு அதிகரிக்க ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* பெற்றோரின் கருத்துகளை கேட்டறிந்த பின்பு, மருத்துவக்குழுவுடன் ஆலோசித்து பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு எடுக்கப்படும்.

* 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் சந்தேகங்களுக்கு தீர்வு காண அக்.1 முதல் பள்ளிக்குச் செல்லலாம் என்ற அரசாணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

* 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்வது பற்றி மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை நடத்தியபிறகு முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதன்மூலமாக, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் அக்டேபர் 1 முதல் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணை நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் 3வது வாரத்தில்இருந்து கடந்த ஆறுமாதங்களாகவே மூடித்தான் கிடக்கின்றன. பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டு தொடங்கப்பட்டு, ஆன்லைன் வாயிலாக கல்வி கற்பிக்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் வைத்துள்ளவர்கள் மட்டுமே கல்வி கற்க முடியும் என்கிற நிலை இப்போது உள்ளது.

அரசு பள்ளி மாணவர்கள் கல்வி கற்க வேண்டுமெனில், தொலைக்காட்சிகளில் வரும் பாடங்களை பார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்வி தொலைக்காட்சி உள்பட பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகிறது. இதனிடையே மத்திய அரசு வழிகாட்டுதல்களின் படி, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள், பெற்றோர்களின் ஒப்புதலுடன் அக்டோபர் 1ம் தேதி முதல் பள்ளிக்கு வந்து சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

மாணவர்களிடையே சமூக இடைவெளியை கடைபிடிக்க பல்வேறு விதிமுறைகளை அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் பள்ளிகளை திறக்கும் முடிவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவர்களின் விஷயத்தில் அரசு சரியான முடிவெடுக்க வேண்டும் என்றும் அவசர கதியில் முடிவெடுக்கக்கூடாது என்றும் வலியுறுத்தின.

இதனிடையே 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1 முதல் பள்ளிக்கு செல்லலாம் என்ற தமிழக அரசின் அரசாணை நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.

மாணவர்களின் நலன் கருதி, பெற்றோர்களின் கருத்துகளை கேட்டறிந்த பின்பு, மருத்துவக் குழுவுடன் ஆலோசித்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு எப்போது வரலாம் என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கூட்டத்திற்கு பிறகு முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதனால் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு சென்று ஆலோசனை பெற போக முடியாது. பள்ளிகளும் திறக்கப்படாது என்று உறுதியாகி உள்ளது. எனினும் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் மருத்துவ குழுவை ஆலோசித்த பின்னர் அறிவிக்க வாய்ப்பு உள்ளது. மருத்துவ குழுவை முதல்வர் பழனிசாமி இன்று சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.