பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (28ம் தேதி) வெளியிடப்படும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக உயர்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில், இன்னும் சில மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாததால் மேலும் அவகாசம் கேட்ட நிலையில், தரவரிசை பட்டியல் தேதி மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தது.

இந்தநிலையில், பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான ரேங்க் பட்டியலை உயர்க் கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் வெளியிட்டுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தரவரிசைப் பட்டியலில் முதல் பத்து இடங்களை பிடித்துள்ள மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் சார்பில் அமைச்சர் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

199.67 கட் -ஆஃப் மதிப்பெண்களை பெற்று சஷ்மிதா என்ற மாணவி தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தை நவநீதகிருஷ்ணன் என்பவரும், காவ்யா என்ற மாணவி 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ரேங்க் பட்டியலில் தவறு இருந்தால் மாணவர்கள் புகார் அளிக்கலாம் என்றும், அது பின்னர் திருத்தி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு இந்த ஆண்டு மொத்தம் 1.60 லட்சம் பேர் விண்ணப்பித்ததாகவும், இவர்களில் விண்ணப்பக் கட்டணம், சான்றிதழ்கள் பதிவேற்றம் உள்ளிட்ட காரணிகளை பரிசீலித்து 1, 08 லட்சம் மாணவர்களின் பெயர் தரவரிசையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான இறுதிப் பட்டியல் 6ஆம் தேதி வெளியிடப்படும்  என்றும் கூறியுள்ளார்.

மாணவர்கள் தங்களது தரவரிசைப் பட்டியல் விவரங்களை www.tneaonline.org என்ற இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.