“பூமி விரைவில் அழியப் போகிறது” என, மணிப்பூரைச் சேர்ந்த 8 வயது சிறுமி லிசிபிரியா கங்குஜம் எச்சரிக்கை குரல் கொடுத்து வருவது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

உலகம் தோன்றி பல ஆயிரம் ஆண்டுகள் ஆகும் நிலையில், உலகின் கால நிலை மாற்றத்திலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆனால், இந்த மாற்றங்கள் அனைத்தும், இயற்கையால் ஏற்பட்டது கிடையாது. மனிதனின் அன்றாட செயற்கைத் தனமான செயல்பாடுகளில், இயற்கையில் ஏற்பட்ட மாற்றங்களே ஆகும்.

அதே நேரத்தில், இயற்கையின் இந்த கால நிலை மாற்றங்கள் குறித்து, பல்வேறு சமூக ஆர்வலர்களும், சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் தொடர்ந்து குரல் கொடுத்த வந்தனர்.

அதன்படி,  கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கலந்து கொண்ட சுவீடன் நாட்டுப் பருவநிலை மாற்ற ஆர்வலரான 16 வயது சிறுமி கிரேட்டா தன்பெர்க், உலக நாட்டுத் தலைவர்களை நோக்கி, “பருவநிலை மாற்றத்தால் நாம் அனைவரும் பேரழிவின் தொடக்கத்தில் இருக்கிறோம்” என்று, கடுமையாக எச்சரித்தார். 

“ஆனால் நீங்கள் அனைவரும் பணம், பொருளாதார வளர்ச்சி போன்ற கற்பனை உலகத்தை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்?” என்றும், உலக நாட்டுத் தலைவர்களை நோக்கி மிகவும் ஆக்ரோஷமாக முழங்கினார் சிறுமி கிரேட்டா தன்பெர்க்.

இதனையடுத்து, சிறுமி கிரேட்டா தன்பெர்கின் பருவநிலை மாற்றம் பற்றிய கருத்து, உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் காரணமாக, பருவ நிலை மாற்றங்கள் குறித்து பள்ளி மாணவர்கள் மத்தியில் பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அமைதிக்கான நோபல் பரிசுக்கும் சிறுமி கிரேட்டா தன்பெர்க் பரிந்துரை செய்யப்பட்டார்.

இந்நிலையில், இந்தியாவின் மணிப்பூரைச் சேர்ந்த 8 வயது சிறுமி லிசிபிரியா கங்குஜம், இந்தியாவில் நிலவும் காலநிலை மாற்றம் தொடர்பாக குரல் கொடுக்கத் தொடங்கி உள்ளார். 

“பசுமை இல்ல வாயுக்கள் வெளியேறுவதைத் தடுக்க மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தி வருகிறார்.

குறிப்பாக, “பூமியை சுற்றுச்சூழல் மாசுபாட்டிலிருந்து எப்படிப் பாதுகாப்பது என்பது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக நிலாவுக்கு செல்லும் முடிவைத் தான் எடுத்துள்ளதாக” அந்த சிறுமி கூறி உள்ளார்.

மேலும், “நமது பூமியையும், எதிர் காலத்தையும் பாதுகாப்பதற்காக நான் போராடுகிறேன் என்றும், பள்ளி செல்லும் குழந்தைகளின் உடல் நிலை குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன்” என்றும், 8 வயது சிறுமி லிசிபிரியா கங்குஜம் கவலையோடு தெரிவித்து உள்ளார்.

அத்துடன், “வானியலாளர் ஆக மாற வேண்டும் என்பதே எனது இலக்கு என்றும், நிலாவுக்கு சென்று நிச்சயம் ஆராய்ச்சி மேற்கொள்வேன் என்றும், சுவாசிப்பதற்குத் தூய்மையான காற்று, குடிநீர், உணவு ஆகியவற்றை எப்படி பெற வேண்டும் என்பதை ஆராய்ச்சி செய்ய வேண்டும்” என்றும், அந்த சிறுமி வலியுறுத்தி உள்ளார். 

“அதற்கு முக்கிய காரணம், நமது பூமி விரைவில் அழியப் போகிறது என்றும், அதற்கான எச்சரிக்கை குரல் தான் இது” என்றும், அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சிறுமி லிசிபிரியா கங்குஜம், கடந்த 21 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் முன்பு நின்று போராட்டத்தில் ஈடுபட்டார். காலநிலை மாற்ற சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பதாகை ஏந்தி தனது கருத்தைத் தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.