கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தொழில் துறைகள் முடங்கியுள்ளன. குறிப்பாக சினிமா தொழில் அதளபாதளத்திற்கு சென்றுவிட்டது. படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டும் திரையரங்குகள் மூடப்பட்டும் ஸ்தம்பித்தது. இதனால் தினசரி வருமானத்தை நம்பியிருந்த தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்த கொரோனா லாக்டவுன் காலத்தில் சினிமா தொழிலை நம்பியிருந்த பல நடிகர்கள் காய்கறி விற்பது, மீன் விற்பது, ஹோட்டல் நடத்துவது என தொழிலை மாற்றி பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் கொரோனாவால் சினிமா தொழில் முடங்கியதால் குணச்சித்திர நடிகர் ஒருவர் மீன் விற்கும் தொழிலில் இறங்கியுள்ளார். அதாவது திண்டுக்கல் என்எஸ் நகரைச் சேர்ந்தவர் மெய்யப்பன். 65 வயதான இவர் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு வந்தார். அவரது முயற்சிக்கு பலனாக பல படங்களில் துணை நடிகராக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். 

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான சிவாஜி படத்தில் சிரிய வேடத்தில் நடித்துள்ளார் மெய்யப்பன். விஷ்ணு விஷால் நடித்த வெண்ணிலா கபடி குழு, திட்டக்குடி, ஜீவா நடிப்பில் வெளியான கோ, கார்த்தியின் ஆயிரத்தில் ஒருவன், குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார்.

கடந்த 6 மாதங்களாக கொரோனா காரணமாக படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாததால் வறுமையால் பாதிக்கப்பட்டார் மெய்யப்பன். வருமானம் இல்லாமல் சென்னையில் காலத்தை ஓட்ட முடியாமல் மீண்டும் சொந்த ஊரான திண்டுக்கல்லுக்கே சென்றுள்ளார் மெய்யப்பன்.

ஆட்டோ ஓட்ட தெரிந்த போதும் லாக்டவுன் காரணமாக அந்த தொழிலை செய்ய முடியாமல் போனது. இதனால் நண்பர்களின் ஆலோசனைப்படி மீன் விற்க முடிவு செய்தார் மெய்யப்பன். இதற்காக பழைய விலைக்கு ஆட்டோ ஒன்றை வாங்கி அதற்கு ஏற்றது போல் மாற்றிக்கொண்ட மெய்யப்பன், அதையே மீன்கடையாக மாற்றிவிட்டார். பகல் நேரங்களில் தெரு தெருவாக சென்று மீன் விற்று வரும் மெய்யப்பன், மாலை நேரங்களில் மீன் மற்றும் சிக்கன் ஆகியவற்றை பொறித்து விற்பனை செய்து வருகிறார். தனது வேலைக்கு உதவியாக வைத்துள்ள மெய்யப்பன், நாள்தோறும் வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.

கடந்த ஆறு மாதங்களாக கொரோனா வைரஸ் காரணமாக சினிமா தொழிலை நம்பி இருந்தவர்கள், படப்பிடிப்பு ஏதும் இல்லாமல் உணவின்றி, உடமையின்றி அவதிப்பட்டு வந்தனர். பல பிரபலங்கள் பெட்டி கடை வைப்பது, ஆட்டோ ஓட்டுவது, உணவகங்களில் வேலை பார்ப்பது என கிடைத்த தொழிலை செய்து வந்ததை காண முடிந்தது. நடிகர் சங்கம் மற்றும் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் இவர்களுக்கு தகுந்த உதவியை செய்ய வேண்டும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.