4 ஆம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமி மாயமான நிலையில், தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்து உள்ள கொலக்கம்பை, தூதூர்மட்டம் பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் வட மாநிலத் தொழிலாளர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர். 

குறிப்பாக, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த லட்சுமணன், அவரது மனைவி சுமன் குமாரி ஆகியோர் தூதூர்மட்டம் அருகே உள்ள தனியார் தேயிலைத் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றனர். இந்த தம்பதிக்கு ப்ரீத்தம் என்ற மகனும் ப்ரீத்தி குமாரி என்ற மகளும் உள்ளனர். பிரீத்தம் வட மாநிலத்தில் உள்ள அவர்களது உறவினர் வீட்டில் தங்கி படித்து வருகிறார். 

மேலும், இந்த தம்பதிகளுடன் தங்கியிருந்த 8 வயதான மகள் பிரீத்தி குமாரி, இங்குள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில், வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுமி பிரீத்தி குமாரி, திடீரென காணாமல் போய் உள்ளார். 

வெகு நேரம் ஆகியும் மகளை காணவில்லை என்று அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், அப்பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் தேடியும் அவர் எங்கும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, பயந்துபோன சிறுமியின் பெற்றோர், அங்குள்ள கொலக்கம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அவர்களது புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த குன்னூர் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையிலான காவல் துறையினர், வனத்துறையினர் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர், காணாமல் போன சிறுமி பிரீத்தியை தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

அத்துடன், அந்த பகுதிகளில் கடைகள் மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டும் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

அதே போல், பாலக்கோடு அருகே 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவி கடத்தப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம் மாரண்ட அள்ளி அடுத்து உள்ள செங்கண் பசவன் தலாவ் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். தற்போது, கொரோனா வைரஸ் தொற்று காரணமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை றிவிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, மாரண்ட அள்ளி அருகே இருக்கும் சிக்க மாரண்ட அள்ளிப் புதூரில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்தார். 

இப்படியான நிலையில், கடந்த 19 ஆம் தேதி இரவு 10 மணி அளவில், அந்த சிறுமி இயற்கை உபாதை கழிக்க வெளியே சென்றுள்ளார். ஆனால், அதன் பின் அந்த சிறுமி வீடு திரும்பவில்லை என்று, கூறப்படுகிறது. அந்த பகுதி முழுவதும் அந்த சிறுமியை எங்கு தேடியும் அந்த சிறுமி கிடைக்கவில்லை. 

இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பாட்டி உட்பட அவரது உறவினர்கள், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அங்குள்ள செங்கண் பசுவன் தலாவ் பகுதியைச் சேர்ந்த சின்னண்ணன் மகன் 17 வயதான சந்தோஷ்,  என்பவர் தான் அந்த மாணவியை கடத்தியதாகத் தகவல் கிடைத்தது. 

இதனையடுத்து, கடத்தப்பட்ட சிறுமியை மீட்டுத் தரும்படி திம்மப்பன் மாரண்ட அள்ளி காவல் நிலைத்தியத்தில், சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இது தொடர்பாக மாரண்ட அள்ளி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, மாயமான மாணவியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.