தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக அழகிய திரைப்படங்களை வழங்கி வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அடுத்ததாக தயாராகி வரும் திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தா இணைந்து நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்துக்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கிறார்.

மேலும் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் தங்களது தயாரிப்பு நிறுவனமான ரௌடி பிக்சர்ஸ் சார்பில் திரைப்படங்களை தயாரித்து வருகின்றனர். முன்னதாக அவர்களது தயாரிப்பில் இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் கூழாங்கல் திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கு பெற்றதோடு ஆஸ்கார் விருதுக்கு நேரடியாக இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பில் பிக்பாஸ் பிரபலமும் நடிகருமான கவின் கதாநாயகனாக நடிக்கும் ஊர்க்குருவி திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவனின் உதவி இயக்குனரான அருண் இயக்குகிறார். அடுத்ததாக ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் என்ற புதிய திரைப்படத்தை இயக்குனர் விநாயக்.V இயக்குகிறார்.

சூர்யாவின் சூரரைப்போற்று படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் கிருஷ்ணகுமார் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி பந்துவீச்சாளர் தீபக் சஹரின் அக்கா மால்டி சஹர் கதாநாயகியாக நடிக்கிறார் என அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.