காதலை கைவிட்ட காதலியை, காதலனே கழுத்தை நெரித்து கொடூரமாக கொன்ற சம்பவம், கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்து உள்ள தேவியானந்தல் கிராமத்தைச் சேர்ந்த நர்சிங் மாணவி சரஸ்வதி என்ற இளம் பெண், அதே பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.

இவர்கள் இருவரம் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இவர்களது காதல் விவகாரம் இளம் பெண் சரஸ்வதி வீட்டிற்குத் தெரிய வந்தது. 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண்ணின் பெற்றோர்கள், நைசாக மகளின் காதலன் குறித்து வசிரித்து உள்ளனர். அப்போது, அவர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், தங்களது மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர்.

அத்துடன், தங்களது மகளிடம் பேசி, காதலை கைவிட்டு, வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையைத் திருமணம் செய்துகொள்ள சம்மதிக்க வைத்து உள்ளனர்.

இப்படியான நிலையில், அடுத்த சில நாட்களிலேயே காதலி சரஸ்வதி, அவரின் வீட்டின் பின்புறம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இது தொடர்பாக அங்கு விரைந்து வந்த போலீசார், சரஸ்வதியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், உயிரிழந்த இளம் பெண்ணின் காதலனை தீவிரமாகத் தேடி வந்தனர். அப்போது, அவர் தலைமறைவானதால், அவரை தீவிரமாகத் தேடி வந்தனர்.

அப்போது, காதலன் ரங்கசாமி தனது நண்பர்கள் இருவருடன்,  ஆந்திரா மாநில எல்லையில் மறைந்திருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இது தொடர்பாக அங்கு விரைந்து சென்ற போலீசார், காதலன் ரங்கசாமி மற்றும் அவனது கூட்டாளி ரவீந்திரன் மற்றும் அவர்களது மற்றொரு கூட்டாளியான 17 வயதான சிறுவன் ஆகிய 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். 

இதனையடுத்து, காவல் நிலையம் அழைத்து வந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “காதலிக்கு அவரது வீட்டில் வேறு இடத்தில் மாப்பிள்ளை 
பார்ப்பதைத் தெரிந்துகொண்டதால், இது குறித்து விளக்கம் கேட்க சரஸ்வதியைத் தனியாக அழைத்ததாகவும், ஆனால் அவர் மறுத்த நிலையில், இருவரும் ஒன்றாக சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியதால், பயந்துபோன காதலி சரஸ்வதி தனது வீட்டிற்கு பின்புறம்” வந்திருக்கிறார்.

அப்போது, “ நீ என்னுடன் இப்போது வீட்டை விட்டு வெளியே வர வேண்டும்” என்றும், அவன் மிரட்டிய நிலையில், அந்த பெண் வர மறுத்திருக்கிறார்.

இதனால், இன்னும் ஆத்திரமடைந்த காதலன், “எனக்கு கிடைக்காத நீ, வேறு யாருக்கும் கிடைக்க கூடாது” என்று, கூறி, காதலியின் துப்பட்டாவைக் வைத்தே, அவரின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, தப்பிச் சென்றதும்” தெரிய வந்தது.

மேலும், கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணுக்கு தற்போது 18 வயது மட்டுமே நடப்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து, கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் முயற்சியில் போலீசார் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.