“இந்தியா ஓரே நாடு கிடையாது என்றும், மத்திய அரசு செய்ய நினைக்கும் திட்டங்களை நீதிபதிகள் மூலமாக நிறைவேற்றி வருவதாகவும்” நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சீறிபாய்ந்து உள்ளார்.

அதாவது, நேற்று முன் தினம் தமிழக ஆளுநர் ரவி, விழா ஒன்றில் பேசும் போது, “இந்தியா என்பது வேறுபட்ட மக்களின் உடன்படிக்கையால் அமைந்தது அல்ல என்றும், இந்தியா என்ற நாடு, 1947 ஆம் ஆண்டு பிறந்தது அல்ல” என்றும், அவர் பேசி இருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “ஆளுநர் ரவி, தமது அதிகார வரம்பை மீறி, அரசியல் கருத்துகளைப் பேசி இருப்பது கண்டனத்திற்கு உரியது” என்று, காட்டமாகவே குற்றம்சாட்டினார்.

அதன் தொடர்ச்சியாக தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், “இந்தியா ஓரே நாடு கிடையாது” என்று பேசி, புதிய சர்ச்சைக்கு வித்திட்டு உள்ளார்.

அதாவது, குறிஞ்சாங்குளத்தில் தமிழர் வழிபாட்டு உரிமை மீட்கப் போராடி உயிர் நீத்தவர்களுக்கு 30 ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியானது, சென்னை வளசரவாகத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. 

இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உரிமை மீட்கப் போராடி உயிர் நீதித்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினார்.

இதனையடுத்த, அங்கு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “தமிழக அரசு காந்தாரியம்மன் கோயில் கட்ட உரிய நிலம் ஒதுக்கி வழிபாடு நடத்த வழி வகை செய்து தர வேண்டும்” என்று, கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய சீமான், “மூத்த அரசியல் வாதியாக இருக்க கூடிய மதிமுக பொது செயலாளர் வைகோ, இந்த பிரச்சினையில் தலையிட்டால் நல்லது, அவரது சொந்த நிலத்தில் இந்த பிரச்சினை இருப்பதால் அவர் தலையிடுவார் என நான் நம்புகிறோம்” என்றும், அவர் குறிப்பிட்டு பேசினார். 

குறிப்பாக, “ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று கூறுபவர்கள் ஒரே குளத்தில் குளிக்கலாம், ஒரே சுடுகாட்டில் அனைவரையும் புதைக்கலாம் என்று சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம்” என்றும், அவர் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

முக்கியமாக, “இந்தியா ஓரே நாடு கிடையாது என்றும், Union of States தான் இந்தியா என்பதை அரசியலமைப்பு சாசனம் சொல்வதாகவும்” சீமான் சுட்டிக்காட்டினார்.

மேலும், “நீட் தேர்வுக்கு எதிராக சட்ட மன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுனர், குடியரசு தலைவருக்கு அனுப்ப மாட்டார் என்றும், மத்திய அரசு அமல்படுத்த நினைக்கும் அனைத்தையும், நீதிமன்றம் எடுத்துச் சென்று நீதிபதிகள் உத்தரவு மூலம் செய்வதாகவும்” சீமான் பகிரங்கமாகவே மத்திய அரசு மீது குற்றஞ்சாட்டினார்.