லேசான காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு ஏற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கா? இல்லையா? என்பதைத் தெரிந்துகொள்ள சில முக்கிய அறிகுறிகள் உள்ளன. அவை என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரசின் 2 வது அலை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கக் கூடிய இந்த நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், பலருக்கும் லேசான காய்ச்சல் மற்றும் சளி, இருமல் போன்ற அடிப்படை தொந்தரவுகள் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. அப்படியானவர்கள் தங்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா? இல்லையா? என்று தெரிந்துகொள்ள சில அறிகுறிகள் மருத்துவர்களால் பட்டியில்பட்டு உள்ளது.

அதன் படி, கொரோனா வைரஸ் தொற்றானது 80 சதவீதம் அளவுக்கு குணமடையக்கூடிய அறிகுறிகளுடனே தாக்குகிறது. மற்றவர்கள் சற்று கூடுதலான கவனிப்புடன் கண்காணித்து, தகுந்த நேரத்தில் சரியான சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகே அதிலிருந்து குணமடைகின்றனர். 

அதிலும், குறிப்பிட்ட சிலர் மட்டுமே உயிரிழப்பைச் சந்திக்க நேரிடுகிறது. இப்படி கொரோனா வைரஸ் தொற்று வீரியம் தீவிரமாகத் தாக்கி, அது தொடர்பாக தீவிர சிகிச்சை தேவைப்படுவோருக்கு அறிகுறிகள் எப்படி இருக்கும் என்றால், 

- கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அதன் தீவிரம் 5 நாட்கள் கழித்தே அதிகரித்துக் காணப்படும்.

- அப்படி அதிகரிக்கும் போது, அதன் தொடர்சியாக உடலின் நோய் எதிர்ப்பு செல்கள் அழிக்கப்பட்டு, உடலை வேகமாக கொரோனா வைரஸ் தாக்கத் தொடங்கும். 

- இதில், முக்கியமாக நுரையீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுகிறது. 

- ஆக்சிஜன் அளவு குறையத் தொடங்கும். 

- மற்ற உறுப்புகள் பாதிக்கப்படும். 

இப்படியான அறிகுறிகள் தென்பட்டாலே அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவது அவசியம்.

அதே நேரத்தில், கொரோனா நோயாளிகளிடம் காய்ச்சல் என்பது, பொதுவான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. இது, அதிகபட்சமாக 3 முதல் 5 நாட்கள் வரை நீடிக்கும். ஆனால், 5 நாட்கள் கழித்தும் காய்ச்சல் இருந்தாலோ, நாளுக்கு நாள் அதிகரித்தாலோ சிறப்பு செலுத்துவது நல்லது. 

அதற்குக் காரணம், கொரோனா வைரசானது ஆரோக்கிய திசுக்களைத் தாக்கத் தொடங்கிவிட்டதன் அறிகுறிதான் இப்படியான தொடர் காய்ச்சலின் அறிகுறிகளாகப் பார்க்கப்படுகிறது. இவற்றுடன் சேர்ந்து இன்னும் வேறு ஏதேனும் அறிகுறிகள் தெரிந்தால் கூட, உடனடியாக சிகிச்சையில் கவனம் செலுத்துவது மிக நல்லது. 

குறிப்பாக, இருமலும் பொதுவான அறிகுறியாகவே கொரோனாவுக்கு பார்க்கப்படுகிறது. ஆனால், உங்களுக்கு தொடர்ச்சியான மற்றும் கடுமையான இருமல், தொண்டை வலி, தொண்டையில் எரிச்சல் போன்ற தொந்தரவுகள் இருந்தால், கொரோனா வைரஸ் சுவாசப்பாதையை நெருங்கிவிட்டது என்று பொருள் கொள்ளலாம்.

மிக முக்கியமாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும், நோயாளிகளுக்கு நெஞ்சில் அடைப்பது போன்ற அறிகுறிகளை உணர்ந்தால், அவர்கள் கண்டிப்பாக உடனடியாக மருத்துவனிற்குச் செல்வது பெரும் ஆபத்தைத் தவிர்க்கும். 

இந்த கொரோனா வைரசானது, மனிதர்களின் மேல் சுவாசக் குழாயைத் தாக்குவதுடன், அடைப்பு, எரிச்சல் உணர்வு, சுவாசிக்கும்போது மூச்சுத்திணறல் அல்லது மார்பைச் சுற்றி கடுமையான வலியை அனுபவித்தல் போன்ற அறிகுறிகள் காணப்படும். இப்படியான இந்த அறிகுறிகள் அனைத்தும், கொரோனா வைரஸ் கீழ் சுவாசக் குழாயிலும் பரவுகிறது என்று பொருளாகும். இந்த அறிகுறிகள் யாவும், கொரோனா உங்களுக்குத் தீவிரம் அடைந்திருக்கிறது என்பதைக் காட்டுவதே ஆகும். ஆகவே, கவனமுடன் இருப்போம். கொரோனாவை தடுப்போம்.