சென்னை மதுரவாயல் அருகே உள்ள பாண்டியன் உணவகத்தில் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட சிக்கன் பிரியாணியில், கோழி இறகு இருந்ததாக புகார் எழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல் அருகே வானகரத்தில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பிரபலமான ஓட்டல் பாண்டியன் என்ற அசைவ உணவகம் உள்ளது. இந்த அசைவ உணவகத்திற்கு நண்பர்களுடன் சென்ற இளைஞர், சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து அவருக்கு சிக்கன் பிரியாணி பரிமாறப்பட்டது. 

அப்போது சிக்கன் பிரியாணியில் இருந்த சிக்கன் துண்டுடன், கோழி இறகு இருந்துள்ளது. ஆசையாக சிக்கன் பிரியாணி சாப்பிடலாம் என்றிருந்த இளைஞருக்கு, இதனை கண்டு வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார். 

முறையாக சுத்தம் செய்யாமல் தயாரிக்கப்பட்ட சிக்கன் துண்டுடன் கூடிய பிரியாணியில் கோழி இறகு இருந்துள்ளது. இதுகுறித்து சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்த இளைஞர், சர்வரிடம் கேட்டபோது அவர் முறையாக பதில் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது.

சிக்கன் பிரியாணிக்கு கோழி இறைச்சியை நீரில் அலசாமல், இறகுடன் கொட்டிவிட்டதாக வாடிக்கையாளரான இளைஞர், உணவக உரிமையாளரிடம் புகார் தெரிவித்திருக்கிறார். ஆனால் அவரும் முறையான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து வாடிக்கையாளர் உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். வாடிக்கையாளர் கொடுத்த புகாரை தொடர்ந்து உணவு பாதுகாப்பு ஆய்வாளர் வெங்கடேசன், பாண்டியன் உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது சுகாதாரம் இல்லாமல் உணவுகள் திறந்திருந்துள்ளன. இப்படி உணவுப் பொருட்களை திறந்து வைத்திருக்கக் கூடாது என்று உணவு தயாரிப்பவர்களிடம் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். அதனோடு, அசைவ உணவகத்தில் இறைச்சிகளில் தடைசெய்யப்பட்ட நிறமூட்டி பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. 

உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயன சிவப்பு வர்ண நிறமூட்டி போட்டு பொறிக்கப்பட்ட சிக்கன் இறைச்சியை கைப்பற்றி குப்பையில் கொட்டினர். இதனைத் தொடர்ந்து அங்கிருந்த சுகாதாரமற்ற கோழி இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

மேலும் தொடர்ச்சியாக கவனக் குறைவுடன் உணவகம் நடத்தி வந்தால், உணவகம் முழுமையாக இழுத்து மூடப்படும் என்று பாண்டியன் உணவகத்திற்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. வானகரத்தில் பிரபல உணவகத்தில் சிக்கன் பிரியாணியில் கோழி இறகு இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.