கொரோனா தொற்று ஊரடங்குக்கு முந்தைய காலகட்டத்தில் கார்பன் உமிழ்வு எந்தநிலையில் இருந்ததோ, அந்த காலகட்டத்திற்கு நிலைமை மீண்டும் திரும்பியுள்ளதாக உலக வானிலை அமைப்பு ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

பூமியில் காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் வெப்ப உமிழ்வு வாயுக்களைக் கண்காணிக்கும் விஞ்ஞானிகள் குழு, கடந்த 2019 ஆம் ஆண்டில் 36.7 பில்லியன் மெட்ரிக் டன்கள் என்ற அளவில், கரியமில வாயு வெளியேற்றம் இருந்ததாக தெரிவித்துள்ளது. 

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் உலக அளவில் சற்று தளர்த்தப்பட்ட நிலையில், தற்போது 2021 ஆம் ஆண்டிலும் 36.4 பில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு கரியமில வாயுவை உலக நாடுகள் வெளியேற்றும் என்று விஞ்ஞானிகள் குழு மதிப்பிட்டுள்ளது. கடந்த ஒன்பது மாதங்களிலேயே கார்பன் உமிழ்வு அதிகரித்துள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டில் பொதுமுடக்கம் உலக அளவில் அமலில் இருந்தபோது, உலகில் கார்பன் உமிழ்வுகள் 34.8 பில்லியன் மெட்ரிக் டன்களாகக் குறைந்தன. ஆனால் தற்போது உலக அளவில் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு பொதுமக்கள் சற்று சகஜநிலைக்கு திரும்பியுள்ளனர். இதனால் உலக கார்பன் திட்டத்தின் புதுப்பிக்கப்பட்ட கணக்கீடுகளின்படி, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 4.9 சதவீதம்  அளவுக்கு கார்பன் உமிழ்வு அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு சீனாவின் மாசு அதிகரிப்பும் உலகளாவிய புள்ளிவிவரங்கள் 2019 ஆம் ஆண்டிற்குத் திரும்புவதற்குப் பெரும்பாலும் காரணமாக கூறப்படுகிறது.  2019 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது, 2021 ஆம் ஆண்டில் சீனாவில் கார்பன் உமிழ்வு 7% அதிகமாக இருந்தது என்று விஞ்ஞானிகள் குழு கூறுகிறது. 

C1

இந்தியாவின் உமிழ்வு 3 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு நேர்மாறாக, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் உலகின் பிற நாடுகளில் 2019 ஆம் ஆண்டை விட, 2021 ஆம் ஆண்டில், மாசுபாட்டின் அளவு குறைவாகவே பதிவாகியுள்ளது என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

உலகின் மாசுபாடு குறித்த புள்ளிவிபரங்கள் அதிகரிப்பதற்கு, சீனாவின் மாசு அதிகரிப்புதான் "பெரும்பாலும் காரணம்" என்று கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழக விஞ்ஞானி கொரின் லிக்கொய்ர்  தெரிவித்திருக்கிறார். மின் பயன்பாடு, பயணம், தொழில்துறை உற்பத்தி மற்றும் பிற காரணிகள் பற்றிய அரசாங்கங்களின் தரவுகளின் அடிப்படையில். இந்த புள்ளிவிவரங்கள் ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் கிளாஸ்கோ பருவநிலை மாற்ற மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 

இந்த ஆண்டு சராசரியாக 115 மெட்ரிக் டன் கார்பன் டை ஆக்சைடு ஒவ்வொரு நொடியும் காற்றில் கலக்கிறது என்றும் இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. பிரேக்த்ரூ இன்ஸ்டிடியூட்டின் காலநிலை இயக்குனர் ஜூகே ஹவுஸ்ஃபாதர் கூறுகையில், " இந்த ஆய்வு முடிவுகள் மூலமாக வரும் 2022 ஆம் ஆண்டில் புதைபடிவ எரிபொருட்களிலிருந்து வெளிவரும் கார்பன் உமிழ்வுகள், உலகளாவிய அளவில் ஒரு புதிய உச்சத்தை தொடுவதற்கு வாய்ப்பு உள்ளது" என்று கணித்துள்ளார்.

கடந்த ஆண்டில் மட்டும 1.9 பில்லியன் டன் கார்பன் உமிழ்வு தடுக்கப்பட்டதாகவும், ஆனால் வாகனங்களில் இருந்து வெளியேறும் கார்பன் உமிழ்வை விட தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் இயற்கை எரிவாயு மற்றும் நிலக்கரி உமிழ்வுகள் அதிகமாக காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

C2

ஸ்காட்லாந்து கிளாஸ்கோ  நகரில் நடைபெற்று வரும் COP26 பருவநிலை மாற்றம் மாநாட்டில் கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைகளை உலக நாடுகள் ஆய்வு செய்து வருகின்றன. இந்த மாநாட்டில் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பதை நிறுத்துவதாக ஏற்படுத்தப்பட்ட தீர்மானத்தின் மீது, 40-க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டன. ஆனால் இதில் அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் கையெழுத்து இடவில்லை.

இந்த மாநாட்டில், பருவநிலை மாற்றத்தை சரிசெய்யாமல், உலக தலைவர்கள் பொய்யான வாக்குறுதிகளை தருவதால், தங்கள் தலைமுறை ஏமாற்றம் அடைந்திருப்பதாக, தமிழகத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி வினிஷா உமாசங்கரும் வெளுத்து வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.