கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெண்ணை எரித்துக் கொன்ற கள்ளக் காதலன் வழக்கில் அதிரடி திருப்பமாக, திருமண பந்தத்தை மீறிய உறவில் இருந்த 2
பேருக்கு இடையே நடந்த பிரச்சினையே முக்கிய காரணம் என்பது தெரிய வந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெண் ஒருவரை, ஆண் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் அனைத்து தொலைக்காட்சிகளிலும் வெளியாகி, தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இது தொடர்பாக சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், எரித்துக்கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 
அத்துடன், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அதே நேரத்தில், இந்த வழக்கில் இது தனிப்படை அமைக்கப்பட்டது. 

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், “சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த 46 வயதான சாந்தி என்ற பெண், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தங்கி தனியார் நிறுவனம் சார்பில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார் என்பதும், இவர் பேருந்து நிலையத்தில் வேலை செய்து கொண்டு, அங்குள்ள நடைமேடையில் தங்கி வந்தார்” என்பதும் தெரிய வந்தது. 

மேலும், “சந்திக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், அவர் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, கணவனை பிரிந்து நிலையில், வேறு ஒருவருடன் தங்கி கணவன் - மனைவி போல் சாந்தி வாழ்ந்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில், சென்னை வடபழனி பேருந்து பனிமனையில் துப்புரவு பனியாளராக வேலை செய்து வந்த 48 வயதான முத்து என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவருடன் கள்ளக் காதலில் சாந்தி இருந்து வந்திருக்கிறார். 

அதே நேரத்தில், தனது 2 வது கணவன் உடன் தனது பழைய உறவை, அவர் தொடர்ந்து வந்திருக்கிறார். இப்படியாக, 2 வது கணவன் உடனும், 3 வதாக கள்ளக் காதலன் முத்து உடனும் சாந்தி தனது உறவை தொடர்ந்து இருக்கிறார். இந்த விசயம் முத்துக்கு தெரிய வந்த நிலையில், அவர் பல முறை சாந்தியை கண்டித்து இருக்கிறார். ஆனால், இதனை சாந்தி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இப்படியான நிலையில் தான், அதிகாலை 2 மணி அளவில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சாந்தி நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த கள்ளக் காதலன் முத்து, தான் கொண்டு வந்த பெட்ரோல் கேனை திறந்து தனது உடலில் ஊற்றி கொண்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த சாந்தியின் உடலின் மீதும் ஊற்றி உள்ளார். 

அப்போது, பெட்ரோல் வாசனை வந்ததை பார்த்த சாந்தி, எழுந்து நிற்பதற்குள் காதலன் முத்து தீக்குச்சியை உரசி சாந்தியின் மீதும், தனது உடல் மீதும் பற்ற வைத்துக் கொண்டார். இதில், இருவரின் உடலிலும் தீ வேகமாக பரவியதால், இருவரும் அங்கேயே அலறிய துடித்து பேருந்து நிலையத்தில் அங்கும் இங்கும் ஓடினார்கள். இதைக் கண்டதும் அங்கிருந்த பயணிகள் பயந்துபோய் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். 

இதனையடுத்து, இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு, பலத்த தீ காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இருவரும் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்” என்பதும் தெரிய வந்திருக்கிறது. இந்த கள்ளக் காதல் சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.