அதிமுக முன்னாள் அமைச்சர்  கே.பி.அன்பழகன் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட ரெய்டில் கணக்கில் வராத 2 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் அடுத்தடுத்து முன்னாள் அமைச்சர் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில், ஏற்கெனவே முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் என 5 பேரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்ட நிலையில், தற்போது கே.பி.அன்பழகன் தொடர்புடைய 57 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், அவரது மனைவி, மகன்கள் மற்றும் மருமகள் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்த நிலையில், அவர்கள் தொடர்புடைய தருமபுரி, சென்னை, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

“உயர் நீதிமன்ற உத்தரவுப்படி லஞ்ச ஒழிப்புத் துறையினர், கே.பி.அன்பழகன் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில்,  இந்த சோதனையானது நடத்தப்பட்டதாகவும்” கூறப்படுகிறது.

அதாவது, “பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான கே.பி. அன்பழகன், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்த போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் விசாரணை நடத்த வேண்டும் எனவும், கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதன்படியே, கே.பி. அன்பழகன், வருமானத்திற்கு அதிகமாக 11 கோடியே 33 லட்சத்துக்கும் அதிக மதிப்பில் சொத்து சேர்த்ததாக தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவால், வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இதன் அடிப்படையில் தருமபுரி மாவட்டத்தில் 53 இடங்கள், தெலங்கானாவில் ஒரு இடம் உட்பட மொத்தமாக 58 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். 

இந்த அதிரடியான சோதனையில், 

- 2 கோடியே 87 லட்சத்து 98 ஆயிரத்து 650 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்து உள்ளது.

- 6.647 கிலோ தங்க நகைகள்

- சுமார் 13.85 கிலோ வெள்ளி நகைகள்

- ஆவணங்கள் உட்பட கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டு உள்ளது.

அதன்படி, 

- கணக்கில் வராத 2 கோடியே 65 லட்சத்து 31 ஆயிரத்து 650 ரூபாய் பணம், வங்கி பெட்டக சாவி மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறியுள்ளது. 

- இந்த வழக்கு, புலன் விசாரணையில் உள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை தனது அறிக்கையில் கூறியுள்ளது.

அதே போல், சேலத்திலும் அன்பழகன் தொடர்புடைய கனிமவளத்துறை அதிகாரி ஜெயபால் என்பவரின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் ஜெயபால் பணியாற்றியபோது, முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்கு உதவியதாக கூறப்படுகிறது. 

தர்மபுரியில் மட்டும் நாற்பத்தி ஓரு இடங்களில் சோதனை நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவித்து உள்ளது.

முக்கியமாக, முன்னாள் அமைச்சர் மீது மட்டுமல்லாது அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் மற்றும் மருமகள் வைஷ்ணவி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

மிக முக்கியமாக, கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வேட்புமனுத் தாக்கலின்போது, “தனது சொத்து மதிப்பு 1.60 கோடி” என்று, அவர் குறிப்பிட்டிருந்தார். 

ஆனால், 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் 23.03 கோடி என தனது சொத்து மதிப்பை குறிப்பிட்டிருந்தார். இந்த இடைப்பட்ட காலத்தில் 21 கோடியே 43 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்து உள்ளது தெரிய வந்தது. 

அதே போல், “இந்த காலகட்டத்தில் சுமார் 13 கோடியே 32 லட்சத்து 92 ஆயிரத்து 231 ரூபாய் அளவிற்கு குடும்ப செலவு, தேர்தல் செலவு, வருமான வரி செலுத்துதல், கடன் செலுத்துதல், காப்பீட்டுத் தொகை செலுத்துதல் என்ற அடிப்படையில் செலவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

இவற்றுடன், சொத்துக்களின் மதிப்பையும் அதன் சேமிப்புகளையும், செலவினங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் போது 11 கோடியே 32 லட்சத்து 95 ஆயிரத்து 755 ரூபாய் கணக்கில் வராமல் சொத்துக்களாக குவித்து உள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை குற்றம்சாட்டி உள்ளது.

குறிப்பாக, உயர் கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்தபோது தனது உறவினர்கள் பெயரில் கணக்கில் வராமல் சொத்துக்களை குவித்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, “தனது வீட்டில் இருந்து நகை, பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை” என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன், தெரிவித்து உள்ளார்.