விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி வழக்கம்போல் இந்த முறையும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. முதல்முறையாக 18 போட்டியாளர்கள் ஆரம்பத்திலேயே களமிறங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் நடிகர் சஞ்சீவ் மற்றும் நடன இயக்குனர் அமீர் ஆகியோர் வைல்ட் கார்ட் என்ட்ரியில் களமிறங்கினர். முதல் சில வாரங்களிலேயே எலிமினேட் செய்யப்பட்ட அபிஷேக் ராஜாவும் மீண்டும் வைல்ட் கார்டில் நுழைந்தார்.

106 நாட்கள் நடைபெற்ற பிக் பாஸ் 5 நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. கோலாகலமாக நடைபெற்ற கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் பிக்பாஸ் ரசிகர்களின் மனதை கவர்ந்த ராஜு ஜெயமோகன் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து 24 மணி நேரமும் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதனிடையே பிக்பாஸ் வெற்றிக்குப் பிறகு முதல் முறை நமது கலாட்டா சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்த ராஜூ ஜெயமோகன் பல சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்துள்ளார். குறிப்பாக பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு மற்றும் சிவகார்த்திகேயனுடன் பேசிய தொலைபேசி உரையாடல் குறித்தும் பகிர்ந்துள்ளார்.

அதில், சிவகார்த்திகேயன் அவர்கள் என்னிடம் பேசும்பொழுது, "தற்போது பிக்பாஸ் இருக்கு பிறகு உனக்கு மக்கள் மத்தியில் கிடைத்திருக்கும் பெயர் பெரியது ஆனால் டான் திரைப்படத்தில் உனக்கான கதாபாத்திரம் அதனை ஒப்பிடும்போது சிறியதாக இருக்கிறது கட்டாயம் இன்னும் பெரிய இடங்கள் உனக்கு கிடைக்கும்" என கூறியதாக தெரிவித்தார். மேலும் டான் திரைப்படத்தில் வாய்ப்பளித்ததற்காக சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து சண்டைக் காட்சிகள் உட்பட பல காட்சிகளில் நடித்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். நமது கலாட்டா சேனலுக்கு ராஜு ஜெயமோகன் அளித்த பிரத்யேக பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.