ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை கையகப்படுத்தும் நடவடிக்கை கைவிடப்படுவதாக கோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

tamilnadu govt

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலையம் மற்றும் அங்குள்ள அசையும் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகிய இருவரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதேபோல, வேதா நிலையத்துக்கு 67 கோடியே 90 லட்சம் ரூபாயை இழப்பீடாக நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. 

மேலும் இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது என்றும் அதனை ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தீபா, திபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும் உரிமையியல் நீதிமன்றத்தில் அரசு செலுத்திய அபராத தொகையை பெற்றுக் கொள்ளும்படி தீபா, தீபக் தரப்பிற்கு ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. 

அதனைத்தொடர்ந்து தமிழக அரசின் சென்னை வருவாய் கோட்டாட்சியர் சார்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், வேதா இல்லத்தை கையகப்படுத்துவதற்காக இழப்பீடு நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் செலுத்தப்பட்ட 67 கோடியே 90 லட்சம் ரூபாய் டெப்பாசிட் தொகையை திரும்ப பெற்றுக் கொள்வதாகவும், வேதா இல்லத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கில் வருமான வரித்துறையின் பதில் தேவை என்பதால், வருமான வரித்துறை தரப்பு பதிலளிக்கும் வகையில் இந்த வழக்கின் விசாரணையை வரும் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.