சுப்ரமணியபுரம் என்ற தனது முதல் திரைப்படத்திலேயே இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக ஒட்டுமொத்த திரை உலகின் பாராட்டுகளையும் பெற்ற இயக்குனர் M.சசிகுமார், அடுத்து இயக்கிய ஈசன் திரைப்படமும் அனைவராலும் கவனிக்கப்பட்டது.  தொடர்ந்து நடிகராக பல திரைப்படங்களில் நடித்து வரும் M.சசிகுமார் நடிப்பில் அடுத்தடுத்து வித்தியாசமான திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.

அந்த வகையில் முன்னதாக இயக்குனர் அனிஸ் இயக்கத்தில் “பகைவனுக்கு அருள்வாய்”,  இயக்குனர் N.V.நிர்மல் குமார் இயக்கத்தில் “நா நா” மற்றும் இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் இயக்குனர் M.சசிகுமார் நடித்துள்ள “காமன் மேன்” ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.

இந்த வரிசையில் அடுத்ததாக M.சசிகுமார் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று (பிப்ரவரி 16ஆம் தேதி) பூஜையுடன் தொடங்கியது. நடிகர் விமல் நடிப்பில் வெளிவந்த அஞ்சல படத்தின் இயக்குனர் தங்கம்.பா.சரவணன் இயக்கத்தில் அடுத்து தயாராகும் இந்த புதிய திரைப்படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார்.

SKLS கேலக்ஸி மால் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் 2-வதாக தயாரிக்கப்படும் இந்த புதிய திரைப்படத்தில் ராமி ஒளிப்பதிவில், ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்ய, சாம் சி.எஸ் இசையமைக்கவுள்ளார். நல்ல ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக தயாராக இருக்கும் இப்படத்தின் கதாநாயகி தேர்வு நடைபெற்று வரும் நிலையில் நடிகர், நடிகைகள் மற்றும் இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
director actor m sasikumar next movie started with pooja