சென்னை வடபழனியில் இளம் பெண்ணை ஆபாசமாக பேசி “மோசமான காரியம்” செய்த போதை போலீசை தாக்கி செருப்பால் அடித்த விவகாரத்தில்,  பொது மக்கள் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வரும் ராஜு என்ற காவலர், கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு நேரத்தில், பணி முடித்து விட்டு போதையில் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்றுகொண்டு இருந்தார். 

அப்போது, சென்னை வடபழனியில் அமைந்துள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் இளம் பெண் ஒருவர், வேலைக்கு சென்றுவிட்டு, வீட்டிற்குச் செல்வதற்காகப் பேருந்துக்காக காத்து நின்றுள்ளார். 

அந்த இளம் பெண்ணை பார்த்து சற்று சபலப்பட்ட அந்த தலைமை காவலர், அந்த இளம் பெண்ணின் அருகே சென்று அவரிடம் ஆபாசமாகப் பேசியதாகத் தெரிகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண், எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதனால், கடும் கோபம் அடைந்த அந்த தலைமைக் காவலராக ராஜு, அந்த இளம் பெண்ணின் கன்னத்தில் அடித்து உள்ளார். இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண் அலறி துடித்து சத்தம் போட்டு உதவிக்கு அங்கு நின்றுகொண்டிருந்த பொதுமக்களை அழைத்து உள்ளார். இளம் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, அந்த பெண்ணை அந்த காவலரிடம் இருந்து மீட்டு உள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, அந்த காவலரை பொது மக்கள் சரமாரியாக அடித்து தாக்கி உள்ளனர். முக்கியமாக, ங்கு நின்றுகொண்டிருந்த சில பெண்கள், தாங்கள் அணிந்திருந்த செருப்புகளால், அந்த காவலரைத் தாக்கி உள்ளனர். அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்த சில பொது மக்கள், அந்த தாக்குதல் காட்சியை தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்தனர். 

அதன் தொடர்ச்சியாக, சம்மந்தப்பட்ட அந்த காவலரை வடபழனி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற பொதுமக்கள், அங்கு இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், “அவர் கே. கே நகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வரும் ராஜு என்பது தெரிய வந்தது. அங்கும், சக பெண் காவலர்களிடமும் அந்த பகுதியில் இருக்கும் பொது மக்களிடமும் அவர் சம்பந்தமில்லாமல் தகராறில் ஈடுபட்டு வந்ததால், ஏற்கனவே தண்டனையாகத் தான், எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்” என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. 

மேலும், இந்த வழக்கில் தலைமை காவலர் ராஜு மீது நடவடிக்கை எடுக்க வடபழனி காவல் நிலைய போலீசாருக்கு சென்னை காவல் துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். 

இதனால், “இளம் பெண்ணை தாக்குதல், ஆபாசமாகப் பேசுதல், பெண் வன்கொடுமைத் தடுப்பு ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவலர் ராஜு, கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, காவலர் ராஜுவை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்த வழக்கில், தலைமை காவலர் ராஜ் புகார் ஒன்றை போலீசாரிடம் அளித்தார். அந்த புகாரில், “பெண்கள் தனியாக இருந்ததால் உடனடியாக வீட்டிற்கு செல்ல சொன்னதாகவும், அப்போது அங்கு வந்தவர்கள் 'அதை சொல்வதற்கு நீங்கள் யார்?' என என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு என்னை ஹெல்மெட் மற்றும் கையில் தாக்கியதாகவும், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றுமு், வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்த புகாரின் அடிப்படையில் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து காவலரை ஹெல்மெட் மற்றும் கையில் தாக்கி காயம் ஏற்படுத்திய தனியார் நிறுவன 
ஊழியரான மதுரையை சேர்ந்த 24 வயதான தங்கமணி, 24 வயதான விக்னேஷ், வடபழனியை சேர்ந்த 26 வயதான அஸ்வின் கிருஷ்ணா, மெக்கானிக் அருண், 
கே.கே நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான 23 வயதான கார்த்திக் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

தற்போது, அவர்கள் மீது கலகம் செய்தல், பொது இடத்தில் ஆபாசமாகப் பேசுதல், காயப்படுத்துதல், ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் உள்ளிட்ட 5பிரிவுகளின் 
கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த செய்தி, இணையத்தில் பரவியதால் பலரும் போலீசாரின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து, எதிர்மறையான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் சாத்தான்குளம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களால் போலீசாரின் நன்மதிப்பு ஏற்கனவே மிகவும் கெட்டுவிட்ட போதிலும், போலீசார் மிச்சம் மீது இருக்கும் நன்மதிப்பைக் காப்பாற்றிக்கொள்ளாமல், தொடர்ச்சியாக பொது மக்களிடம் இதுபோன்று அத்து மீறி நடந்து வருவது தமிழகத்தில் தொடர்கதையாக நிகழ்வதாகப் பொதுமக்கள் கவலைத் தெரிவித்து உள்ளனர்.