மேஷம்

2021 ஆண்டு குரு, சனி பத்தாமிடமான தொழில், கர்ம ஸ்தானத்தில் இருக்கும் காலத்தில் பிறக்கிறது. தொழில்காரகனான சனி பலம் பெறுவதால் தொழிலில் பதவி உயர்வு, மேன்மை கிடைக்கும். பத்தாமிட குரு நீச பங்கம் பெறுவதால் புதிய வேலை வாய்ப்பு, அரசாங்க உதவி, புதிய தொழில் தொடக்கம் செய்வர். வணிக ரீதியான பல மாற்றங்களை செய்யும் காலமாக இருக்கும். 

தாயார், வீடு, வாகனங்களால் சிலருக்கு நன்மையும், சிலருக்கு தீமையும் ஏற்படும். திருமணம் போன்ற சுபகாரியம் குடும்பத்தில் நடைபெறும். நோய் எதிரி கடன் தொந்தரவுகளால் மனதில் பயம் தோன்றும். எல்லாம் நன்மையில் முடியும். தசா புத்தி
சாதகமாக இருப்பவர்களுக்கு வாழ்க்கையின் புதிய அத்தியாயம் தொடங்கும்.

ரிஷபம்

கடந்த காலங்களில் ஏற்பட்ட விரக்திக்கு பெரிய நிவாரணமாக இந்த வருடம் அமையும். தோற்ற பொழிவு, தைரியம், தன்னம்பிக்கை பிறக்கும். தடைபட்ட திருமணம் நல்ல வரன் கிடைத்து சிறப்பாக நடக்கும். நீண்ட நாட்களாக புத்திர பாக்யம் இல்லாமல் இருந்தவர்களுக்கு வாரிசு யோகம்  உண்டாகும்.  நோயால் அவதிப்பட்டவர்களுக்கு பெரிய நிவாரணம் கிடைக்கும். எதிரியாய் இருந்தவர்களின் மனநிலை மாறி பச்சை கொடி காட்டுவர் கடனால்  அவதிப்பட்டவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் தீரும்.

சகோதரம், பிள்ளைகள், தந்தை, எதிரிகளால் லாபம் உண்டாகும். சிலருக்கு இளைய தாரமும், இளைய தாரத்தால் யோகம், பாக்கியம் ஒருங்கே அமையும். மனதிற்கினிய சம்பவங்கள் நடை பெறும். இருந்தாலும் யாரிடமும் கவனமாக பேசுவதோ பழக்குவதோ அவசியம். தசா புத்தி நன்கு அமைந்தவர்களுக்கு எதிர்பாராத பெருத்த லாபமுண்டு.

மிதுனம்

அஷ்டம சனி, அஷ்டம குரு என்பதால் எதிலும் பொறுமை நிதானம் அவசியம். எந்த ஒரு புதிய செயலில் இறங்கினாலும் தடை தாமதம் சாதாரணமாக நடக்கும். அகப்பட்டவனுக்கு அஷ்டம சனி என்பதெல்லாம் பொய் என சொல்லிக்கொண்டே மாட்டிக் கொள்வர். தொடங்கும் வரை நன்கு யோசித்து இறங்க வேண்டும். தொடங்கி விட்டால் அதை விடவும் முடியாமல், தொடர்ந்து செய்யவும் முடியாமல் அவதி ஏற்படுத்தும். தெய்வத்தால் காப்பாற்ற நினைத்தாலும் முடியாது.

ஆறுதலுக்காவது நல்லது சொல்லுங்கன்னு சொல்லிட்டு அப்பவே சொல்லிருந்தா ஆப்பை அசைச்சிருக்க மாட்டேன் னு சொல்லக் கூடாது. எந்த பாதிப்பையும் வெளிக்காட்டாமல் இருந்துவிட்டு குத்துதே கொடையுதேன்னு புலம்பி பயனில்லை. திடீர் அதிஷ்டம் போல், திடீர் நஷ்டமும் ஏற்படும். தாயார், வீடு, வாகன நஷ்டம், உறவினர் பகை, பாதிப்பு, பிள்ளைகளால் அவ பெயர் உண்டாகும். தசா புத்தி நிலையை பொறுத்து தீமை குறையும். மன உளைச்சலால் மன நிறைவு
தராது.

கடகம்

காது குத்து, கல்யாணம் போன்ற சுப விசேசங்கள் நடை பெறும். புது தொழில் உருவாக்க பெரிய முதலீடு செய்ய கூடாது. யார் கெட்டவரோ அவருக்கு வக்காளத்து வாங்கி, நல்லவர்களை பகைப்பர். வாய் பேச்சால் வம்பு வளரும். தாயாருக்கு விரயம், தாயாருக்கு உடல் நிலை பாதிப்பு, வீடு, வாகன மாற்றம், திடீர் விரய செலவு, உறவினர் பகை, சுக குறைவால் மனதில் பயம், நம்பிக்கை இன்மை ஏற்படும்.

தந்தை, தந்தை வழி சொந்தங்களுடன் பகை, தாய், தந்தை, கணவருக்கு கண்டம் ஏற்பட்டு விலகும். குரு பலத்தால் எதையும் சந்திக்கும் துணிவு, இளைய தாரத்தால் நன்மை உண்டாகும். தோல்வி, அவமானம், மனதிற்கு பிடிக்காத மண வாழ்க்கை வேதனை தரும். எதாவது ஒரு வகையில் சம்பாரிக்க வழி கிடைக்கும். கற்பனைகளை சரியான நேரத்திற்கு கை கொடுக்காது.  நல்ல தச புத்தி நடப்பவர்களுக்கு தொட்டது துலங்கும்.


சிம்மம்

இத்தனை ஆண்டு காலம் இருந்த நோய்க்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். மனதில் இருந்த பாரம் நீங்கும். யார் எதிரி என்பதும், தனக்கு தானே எதிரி என்பதை புரிந்து கொள்வார்கள். இது நாள் வரை இருந்த கடன் தீர்ந்து நிம்மதி அடைவர். ஆறாமிடத்து குரு தீமை செய்ய முடியாமல், சனி பலம் காப்பாற்றும். போட்டி, பொறாமைகள் விலகி தெளிவான பாதை, தெளிவான வெற்றி கிடைக்கும்.

குடும்பத்தில் வீண் விரய செலவுகள் தோன்றும். தொழிலில் ஏற்ற, இறக்கம் ழில் ரீதியான மாற்றம், நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. யாரையும் சாதாரணமாக நினைத்ததால் இழப்புகள் தோன்றும். சுயநலத்தை விடுத்தால் நன்மைகள் உண்டாகும். 

கன்னி

அர்த்தாஷ்டம சனி, அர்த்தாஷ்டம குரு நடந்து, கடந்த மூன்று ஆண்டுகள் பலவிதமான கஷ்டங்களை, நஷ்டங்களை கொடுத்தது. சுயநலத்தை கைவிடாமல் இருந்தால், வேதனைகளை யாராலும் எப்போதும் தீர்க்க முடியாது. நான் மட்டும் வாழ வேண்டும். அடுத்தவன் நல்லா இருக்கக் கூடாது என முடிவுகள் எடுத்தால் நஷ்டமே மிஞ்சும்.

பூர்வீக நன்மை,குல தெய்வ அருளால் குடும்பத்தில் ஏற்பட்ட பிணக்குகள் தீர்ந்து வீடு, வாகன லாபம், திருமணம், புத்திர பாக்யம், தொழில் முடக்கம் தீர்ந்து நன்மைகள் நினைத்தபடி கைகூடும். 

துலாம்

அர்த்தாஷ்டம குரு, அர்த்தாஷ்டம சனி உள்ளதால் வாய் பேச்சால் வம்பு வரும். உறவினர் பகை, வீடு கட்டுவது, வாகன மாற்றம் செய்தல் ஏற்படும். எதிலும் திருப்தி அடையாமல் அடுத்தவரை எடை போட்டுக் கொண்டே இருந்தால் யாருடனும் நிம்மதியாக வாழ முடியாது. விட்டுக் கொடுத்தல், சகிப்பு தன்மை போன்ற பண்புகளை வளர்க்க வேண்டும். அஷ்டம குரு நோய், கடனை உருவாக்கும் என்பதால் கவனம் தேவை.

கர்ம ஸ்தானத்தை சனி பார்வையிடுவதால் தாயாருக்கு உடல்நிலை பாதிப்பு, தொழில் உபத்திரங்கள் வரும். பணி இட மாற்றம், பணியில் உடன் பணி புரிபவர்களால் தொல்லைகள் வரும் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சுப விரய செலவுகள் செய்து கொள்ளுதல் நன்மை தரும். தசா புத்தி நன்றாக இருந்தால் கடனில்லாமல் வீடு கட்டுவர். அனைத்து சந்தோசங்களும் கிடைக்கும்.

விருச்சிகம்

ஏழரை சனியால் ஏற்பட்ட கஷ்ட, நஷ்டங்கள் தந்த அனுபவங்கள், இனி இந்த ஜென்மத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்திருக்கும். குடும்பத்தில் சில விரும்ப தகாத சம்பவங்கள் மற்றும் வீண் வாக்குவாதங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். சாமாளிக்கும் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை வாழ்க்கையை மாற்றும். பிரிந்தவர் கூடுவர். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிணக்குகள் தீரும்.

எதிர்பார்த்த, எதிர்பாராத அனைத்து  பாக்யங்களும் தானாக அமையும். தந்தை வழி நன்மை உண்டு. லாபம் நிறைந்த காலம். தசா புத்தி நன்றாக இருந்தால்,அதிக நன்மையும், பலவீனமாக இருந்தால் கெடு பலன்கள்குறையும்.

தனுசு

ஏழரை சனி காலம் நடை பெறுவதால் குடும்பத்தில் வாக்கு வாதங்கள் தொடரும். நாம் என்ன செய்தோமோ, அதற்கு தான் பலன் கிடைக்கும். நம் ஆசைபடுவதெல்லாம் நடக்காது. நியாயமான ஆசைகளும், உழைப்புக் கேற்ற பலனும் நிச்சயம் கிடைக்கும். மறைமுக அதிஷ்டம் கிடைக்கும் என எதிர்பார்ப்பவர்கள் ஏமாற்றமே அடைவர். நோயின் தாக்கமும் வேகமும் குறையும். எதிரிகளால் தொல்லை உண்டு.

போக்குவரத்துகளில் கவனமாக செல்ல வேண்டும். கை, கால்களில் அடிபடக் கூடிய நேரம் என்பதால் எங்கும் எதிலும் கவனம் தேவை. தொழிலில் அதிக லாபம் இல்லை யென்றாலும் மோசம் ஏற்படாது. கஷ்டங்களை ஏற்றுக் கொண்டு புத்தி தெளிவடையும் காலம். யாருக்கும் உதவாமல் இருந்து விட்டு உதவிகளை எதிர்பார்த்தல் நியாயமே இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 

மகரம்

ஜென்ம சனி, ஜென்ம குரு காலம் என்பதால் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன், எனக்கேன் இப்படியெல்லாம் நடக்கிறது என புலம்பாமல் நாம் செய்த கர்ம வினைகளும், நாம் செய்த பாவத்தின் தண்டனையும், நம்மை வந்து தாக்குகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதிகபட்சம் என்ன நடந்துவிடும் நம்பியவர்கள் ஏமாற்றுவார்கள், கடமைகளை செய்ய முடியாமல் போகும், கண்டம் வந்து இறந்து விடுவோம் என எது நடந்தாலும் நடக்கட்டும் என தைரியம் வளர்த்து கொள்ளுவது கஷ்டங்களை தணித்துவிடும்.

யாரும், யாருக்காகவும், யாரையும் நம்பி இல்லை அவரவர் விதிப்படி நடப்பது நடந்தே தீரும் என்பதை உணர்ந்து விட்டால் எந்த வேதனையும் இருக்காது. ஆசைகளை நிறைவேற்ற சிலவற்றை இழந்தே தீரவேண்டும். காசும் தரக்கூடாது வடையும் வேணும் என்றால் கிடைக்குமா? பிச்சை எடுத்து தான் பிழைக்க வேண்டும். தன்னை திருத்தி கொண்டால் ஜென்ம சனி மகிழ்ச்சியையே தரும்.

கும்பம்

தாய் தந்தையருக்குள் வீண் வாக்கு வாதம் சண்டை ஏற்படும். பங்காளிகளுக்குள் சொத்து தகராறு, உறவினர் பகை உண்டு. குடும்பத்திற்குள் வீண் சண்டை சச்சரவுகள் ஏற்படும். நோய், எதிரி கடனால் குடும்பத்தில் பாதிப்பு ஏற்படும். சுப விரய செலவுகளான வீடு கட்டுதல், மனை வாங்குதல் நன்று. தந்தையின் வெளிநாட்டு பயணம் லாபம் தரும். வீண் வாக்குவாதங்களை விட்டு தன் வேலையை நேர்மையாக, சரியாக செய்தால் எந்த பாதிப்பும் வராது. புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். 

கெட்டவர்கள் நன்றாக இருக்கிறார்கள் என்கிற சிந்தனையை வளர விடாமல் நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும் என்பதை உணர்ந்து செயல்பட்டால் இந்த வருடம் சிறப்பாக இருக்கும்.


மீனம்

குரு, சனி இரண்டும் நன்மையான பலன்களை தரும் என சொல்கிறார்கள் அதனால் நினைத்ததெல்லாம் நடந்துவிடும் என வீண் கற்பனை கட்டி கொண்டு வீட்டில் இருந்தால் ஏமாற்றமே மிஞ்சும். திறமைகேற்ற வேலையும், உழைப்புக்கேற்ற ஊதியமும் எண்ணம் போல் வாழ்க்கையும் இந்த ஆண்டு கண்டிப்பாக நடக்கும். கோச்சார பலன்களில் குருவும், சனியும் சுமார் இருபது ஆண்டிற்கு பிறகு நல்ல நிலையில் இருப்பதால் தான் நற்பலன் உறுதியாக உண்டு. 

அடுத்தவர்களை ஒப்பிடாமல் கிடைத்த வாய்ப்பில் நம் திறமையை எப்படி வெளிப்படுத்தி, வெற்றி பெறலாம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். நாம் நினைத்ததில் வெற்றி கிடைத்துவிட்டால் தான் வாழ்க்கை, சந்தோசம், நன்மை என நினைக்காமல் கிடைத்ததில் நன்மையை அனுபவிப்பது தான் மீன ராசிகாரர்களுக்கு காலம் கற்றுத் தந்த பாடம். பிறரை மகிழ்ச்சி படுத்தி நீங்களும் மகிழ்ச்சியாக இருக்கும் பொன்னான ஆண்டு. எந்த ராசியாக இருந்தாலும் அவரவர் திசா புத்தி பலனை பொறுத்தே நன்மையின் அளவுகோல் இருக்கும். பரிகாரத்தை தேடாமல் பிறருக்கு உபகாரமாய் வாழ நினைத்தால் வாழ்க்கை முழுதும் சந்தோசம் இருக்கும்.

                                                                                                 தொடர்புக்கு
                                                                                                 ஜோதிடர் க.காந்தி முருகேஷ்வரர் 
                                                                                                  9600353748