105-வது பிறந்தநாளையொட்டி, எம்.ஜி.ஆர். சிலைக்கு இன்று தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படுகிறது. இதில் அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.

MGR

மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக கட்சி நிறுவன தலைவருமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் 105-ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. மேலும் எம்.ஜி.ஆர். மாளிகையில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய திருவுருவச் சிலைக்கு, ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இன்று இனிப்பு வழங்கினர்.

இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ‘பாரத ரத்னா’ டாக்டர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இன்று  காலை 10 மணியளவில் சென்னை, கிண்டி தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், அமைச்சர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

மேலும் தமிழக மக்களால் மக்கள் திலகம் என்றும், புரட்சித்தலைவர் என்றும் அன்புடன் அழைக்கப்படும் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் இலங்கையில் கண்டி அருகேயுள்ள நாவலப்பிட்டியில் 1917-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி பிறந்தார். தனது சிறுவயது முதற்கொண்டு நாடகத்தில் நடிக்க தொடங்கி பின்னர் இத்துறையில் நல்ல அனுபவம் பெற்று திரைத்துறைக்கு சென்றார்.

அதனைத்தொடர்ந்து 1936-ம் ஆண்டு சதிலீலாவதி என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, தொடர்ந்து சிறிய வேடங்களில் நடித்து வந்தாலும், 1950-ம் ஆண்டு தலைவர் கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதிய ‘மருதநாட்டு இளவரசி' மற்றும் ‘மந்திரிகுமாரி' திரைப்படங்களின் வாயிலாக திரையுலகில் தனக்கென்று ஒரு தனியிடம் பெற்றதோடு, தொடர்ந்து 30 ஆண்டுகள் தமிழ்த்திரைப்பட உலகின் முடிசூடா மன்னனாக விளங்கினார் என்றால் அது மிகையாகாது.

எம்.ஜி ஆர்  நடித்த பல படங்களுக்கு தேசிய விருதுகளும், தமிழ்நாடு அரசின் சார்பில் அண்ணா விருதும் வழங்கி கவுரவப்படுத்தப்பட்டது. அண்ணாவால் ‘இதயக்கனி‘ என்றும், தலைவர் கருணாநிதியால் வழங்கப்பட்ட ‘புரட்சி நடிகர்’ என்கிற பட்டமே பின்னாளில் புரட்சித்தலைவர் என்று நிலை பெற்றது. அன்னாரின் அளப்பரிய மக்கள் சேவையினை பாராட்டி, அவரின் மறைவுக்கு பின் இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா‘ வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.

எம் ஜி.ஆர் தொடக்கத்தில் காந்தியவாதியாக திகழ்ந்தாலும், பெரியார், அண்ணா ஆகியோரின் திராவிட சிந்தனையாலும், கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டு, 1953-ம் ஆண்டு தன்னை திராவிட இயக்கத்தில் இணைத்து கொண்டார். தான் நடித்த திரைப்படங்களிலும் திராவிட கொள்கைகளை மக்களுக்கு எடுத்துரைத்தார். 1962-ம் ஆண்டு சட்டமன்ற மேலவை உறுப்பினராக, சிறுசேமிப்பு திட்டத் துணைத்தலைவராக, 1967-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக, 1969-ல் தி.மு.க.வின் பொருளாளராக, தலைவர் கருணாநிதியின் உற்ற நண்பராக தனது அரசியல் வாழ்வினை தொடங்கியவர், எம்.ஜி.ஆர்.

அதன்பிறகு பின்னாளில் அ.தி.மு.க. என்கிற தனி இயக்கம் கண்டு, 1972-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் பெற்ற வெற்றியினைத் தொடர்ந்து 1977-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதல் முறையாக முதலமைச்சர் ஆகப் பொறுப்பேற்றார். 1977 முதல் 1987-ம் ஆண்டுவரை தொடர்ந்து 10 ஆண்டுகள் 3 முறை தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்தார்.

எம்.ஜி.ஆர்  முதலமைச்சராக பொறுப்பேற்ற காலத்தில் ஏழை, எளியோர் நலம் பெறுகின்ற வகையில், நல்ல பல திட்டங்களைச் செயல்படுத்தினார். இன்றளவும் ஐக்கிய நாடுகள் சபையால் போற்றப்பட்ட சத்துணவுத்திட்டம், தமிழ் மீது கொண்டிருந்த மாறாதப் பற்றின் காரணமாக அவர் நடத்திய 5-ம் உலகத்தமிழ் மாநாடு 1981-ம் ஆண்டு தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கம், பள்ளி மாணாக்கர்களுக்கு இலவச சீருடை, காலணி மற்றும் பற்பொடி வழங்கும் திட்டங்கள், முதியோருக்கு இலவச வேட்டி - சேலை வழங்கிடும் திட்டம், சுயநிதி கல்லூரிகளுக்கு அனுமதி ஆகிய குறிப்பிடத்தக்கவை ஆகும்.

எம்.ஜி.ஆருக்கு  அரசியலில் மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருந்தாலும், தன் வாழ்நாளின் இறுதிவரையில் தலைவர் கருணாநிதியுடனான உயர்ந்த, உன்னதமான நட்பினை என்றும் போற்றி வந்தவர். அன்னாரை பெருமைப்படுத்துகின்ற வகையில், தலைவர் கருணாநிதி 17-1-1990 அன்று சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டார். அந்த விழாவிலே, “தனிப்பட்ட முறையிலே எனக்கும் எனதருமை நண்பர் எம்.ஜி.ஆருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், எனக்கும் அவருக்குமான நட்புணர்வை, என்னையும் அவரையும் மிக சரியாக புரிந்து கொண்டவர்களால் மட்டுமே தெரிந்திருக்க முடியும்“ என்று நட்புணர்வோடு குறிப்பிட்டார்.

மேலும் சென்னை கிண்டியில் கலைஞரால் உருவாக்கப்பட்ட மருத்துவ பல்கலைக் கழகத்திற்கு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டியதோடு அன்னாரின் உருவச்சிலையினையும் 1998-ம் ஆண்டு திறந்து வைத்து பெருமை சேர்த்தார். முன்னாள் முதலமைச்சர் பாரத ரத்னா எம்.ஜி.ராமச்சந்திரனின் நினைவினை போற்றுகின்ற வகையில் அன்னாரின் 105-வது பிறந்த நாளானது இன்று தமிழக அரசின் சார்பில் சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.