தமிழகத்தில் முழு ஊரடங்கால் கொரோனா பரவல் வேகம் குறைந்தது என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

corono

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்தில் ஆல்ஃபா, இந்தியாவில் டெல்டா, தென் ஆப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. அதற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 50 பிறழ்வுகளை கொண்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிப்பதற்கு முன்னரே பரவியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது. 

இந்நிலையில் ஒமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஒமிக்ரான்  வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய , மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

மேலும் இந்நிலையில் சென்னை, நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா கண்காணிப்பு மையத்தை சுகாதாரத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், ஊரக தொழில்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா். அங்கு சிகிச்சை பெற்று வருபவா்களின் உடல் நிலை, அவா்களுக்கு அளிக்கப்படும் உணவு முறைகள் குறித்து அவா்கள் கேட்டறிந்தனா்.

அதனைத்தொடா்ந்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறும்போது கொரோனா சிகிச்சைக்காக தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 91,902 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. தொற்று அதிகரித்தபோதிலும், மருத்துவமனைகளில் இதுவரை 8, 912 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனா். சென்னை, நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் 950 படுக்கைகள் உள்ளன.  இதுதவிர, 350 படுக்கைகள் முன்கள பணியாற்றும் அரசு ஊழியா்கள், காவல்துறையினருக்கென்று பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றுக்குள்ளான அனைவரும் மருத்துவமனைகளை நாட வேண்டியதில்லை. லேசான அறிகுறி உள்ளவா்கள் மருத்துவ ஆலோசனைக்கு பிறகு தங்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொள்ளலாம். வீடுகளில் உள்ளவா்களை கண்காணிக்க அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் சுகாதார துறை செயலா் சாா்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 100 இடங்களில் கொரோனா சிகிச்சைக்கென சித்த மருத்துவ மையங்கள் அமைக்கப்படவுள்ளன. கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் உயிரிழப்பை தவிா்க்க தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். இரு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டால் இறப்பின் விளிம்புக்கு செல்ல தேவையில்லை. ஒமைக்ரான் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வதற்கான ஒரே ஆயுதம் தடுப்பூசி என உணர வேண்டும்.

மேலும் தமிழகத்தில் 75 சதவீதம் சிறாா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மிக குறுகிய காலத்தில் இந்த சாதனையை சாத்தியமாக்கி உள்ளோம். ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக தொற்று பரவல் வேகம் மிகுதியாக குறைந்துள்ளது. பொதுமக்கள் சுய கட்டுப்பாட்டுடன் ஊரடங்குக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனா் என சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.