இந்தியாவில் கடந்த மாதம் தமிழ்நாடு,கேரளா,அசாம்,புதுச்சேரி,மேற்கு வங்காளம் என 5 மாநிலங்களுக்கான தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் நேற்று 5 மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.  

பரபரப்பாக நடந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் மேற்கு வங்கத்தில் ஆட்சியிலிருக்கும் திருமதி.மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி  மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது.கேரளாவில் திரு.பினராய் விஜயன்  தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.அசாமில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று உள்ளது . புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணியில் ஆட்சி அமைய உள்ளது. 

புரட்சித்தலைவி.ஜெ.ஜெயலலிதா மற்றும் கலைஞர்.மு.கருணாநிதி என்ற இரண்டு ஆளுமைகளின் மறைவுக்குப் பிறகு தமிழ்நாட்டில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல்  என்பதால் எந்த கட்சி ஆட்சி அமைக்கும்? யார் முதலமைச்சராக வருவார்? என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. அதில் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள திமுக பத்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.  actor vishal warmly welcomes the new cm of tamil nadu mk stalin

இந்த நிலையில் தமிழ் திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமான விஷால்  சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்ற உதயநிதி ஸ்டாலினுக்கும் முதல் முறை  முதலமைச்சராக பதவியேற்க உள்ள திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் வாழ்த்துக்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் - 

" மிக சிறப்பான வெற்றி பெற்றுள்ள திமுகவிற்கும் எனது இனிய நண்பர்களான உதயநிதி ஸ்டாலின் மற்றும் அன்பில் மகேஷ் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள். 

புதிய முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை அன்போடு வரவேற்கிறோம்.

அடுத்து வரவிருக்கும் சில ஆண்டுகள் பல நல்ல விஷயங்களோடு தமிழ்நாடும் வளரட்டும், நொறுங்கிப் போய் திணறிக் கொண்டிருக்கும் தமிழ் திரைப்படத்துறைக்கு தேவையான ஆக்சிஜனை எதிர்பார்க்கிறோம்” 

என தெரிவித்துள்ளார்

கடந்த 2017-ல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் ஆர்.கே நகர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் நடிகர் விஷால் சுயேட்சையாக களம் இறங்க வேட்பு மனு தாக்கல் செய்தார்  ஆனால் அவரது வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.