வெண்ணிலா கபடிகுழு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். முதல் படத்திலேயே தனது நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கடைசியாக ராம் குமார் இயக்கத்தில் வெளியான ராட்சசன் திரைப்படம், விஷ்ணுவின் திரைப்பயணத்தில் மறக்க முடியாத படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து காடன், FIR, மோகன் தாஸ் போன்ற படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 

அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் எஃப்.ஐ.ஆர் படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். கருணாகரன் மற்றும் இயக்குனர் கவுதம் மேனன் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவில், அஷ்வந்தின் இசையில் உருவாகும் எஃப்.ஐ.ஆர் படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார். டீஸர் ஏற்கனவே வெளியானது. 

தற்போது யார் இந்த இர்ஃபான் அஹ்மத் என்ற ப்ரோமோ வீடியோவை வெளியிட்டது படக்குழு. விஷ்ணு விஷாலின் பிறந்தநாள் என்பதால் ஸ்பெஷலாக அவர் கேரக்டர் கொண்டு இந்த வீடியோவை தீம் சாங்குடன் வெளியிட்டுள்ளனர். கிறிஸ்டோபர் ஸ்டான்லி பாடிய இந்த ராப் பாடலின் வரிகளை கருணாகரன் எழுதியுள்ளார். 

இன்று விஷ்ணுவின் 36-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பர்த்டே பாய் விஷ்ணு விஷாலுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க அவரின் காதலியும், பேட்மிண்டன் வீராங்கனையுமான ஜுவாலா கட்டா ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார். நள்ளிரவில் ஜுவாலா கட்டாவுடன் சேர்ந்து கேக் வெட்டியபோது எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார் விஷ்ணு. 

சமீபத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் மோகன்தாஸ் படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை முரளி கார்த்திக் இயக்க, விஷ்ணு விஷால் தயாரிக்கவிருக்கிறார். விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சுந்தரமூர்த்தி கேஎஸ் இசையமைக்கிறார். ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகவிருந்த காடன் திரைப்படம் கொரோனா காரணமாக தள்ளிப்போனது. பிரபு சாலமன் இந்த படத்தை இயக்கியிருந்தார். இதைத்தொடர்ந்து இயக்குனர் வசந்த பாலன் இயக்கவிருக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார் விஷ்ணு.