கோவையில் நேற்று நள்ளிரவில் சுந்தராபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் பெரியாரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதில் நள்ளிரவில் காவி நிறச் சாயம் பூசிச் சென்றிருந்தனர் மர்ம நபர்கள். இந்நிலையில், இன்று (ஜூலை 17) காலை 5.30 மணியளவில் கண்ட பெரியார் அமைப்பினர் மற்றும் திமுகவினர் சம்பவ இடத்தில் குவிந்து, எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கிவிட்டனர்.

தகவலறிந்து அப்பகுதிக்கு வந்திருந்த குனியமுத்தூர் போலீசா தண்ணீர் ஊற்றி காவி நிற சாயங்களை அகற்றினர். இந்நிலையில், பெரியார் சிலை மீது காவி நிற சாயத்தை ஊற்றிச் சென்ற மர்ம நபர்களைக் கைது செய்ய வலியுறுத்தி திமுக, மற்றும் பெரியார் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் அங்கு வந்த மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஸ்டாலின் மற்றும் தெற்கு உதவி ஆணையர் செட்டிக் மனுவேல் மற்றும் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுக் கூட்டத்தைக் கலைத்தனர். 

இதையடுத்து பெரியார் சிலைக்கு போலீஸ்  பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே சுந்தராபுரம் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காட்சிகளை போலீசார் காலை முதலேவும் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.

இந்தச் சம்பவத்துக்கு, பல்வேறு தலைவர்களும் இன்று காலையிலிருந்தே கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், திராவிடர் கழகத்தினர் மற்றும் பல்வேறு கட்சியினர், மேலும் காவல்துறையினர் அனைவரும் சம்பவ இடத்தில் குவிந்தனர். சிலையிலிருந்த காவி நிறச் சாயத்தை அழித்தவர்கள், சிலையைத் தூய்மைப்படுத்தினர்.

கோவை மாநகரத்தின் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ, இந்த நிகழ்வு பற்றி அளித்த பேட்டியில், "பெரியார் சிலை மீது காவி சாயம் பூசி, அவமதித்த சமூக விரோத அமைப்புகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். சில சமூக விரோதிகள், பெரியாரை அவமானப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு தமிழ்நாட்டின் அமைதியைச் சீர்குலைக்க வி‌ஷமத்தனமாகத் திட்டமிட்டுச் செயல்படுகிறார்கள். இத்தகைய நிகழ்வுகளால் பெரியாரின் புகழைக் குலைக்க முடியாது. அதேசமயம், இத்தகு நிகழ்வுகள் தொடர்வதைத் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. பெரியார் சிலையை அவமதித்து, அதன் மூலம் பொது அமைதியைக் குலைக்கத் திட்டமிட்டவர்கள் மீதும், அதற்குத் தூண்டியவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கையைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்..

தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலர் கு.ராமகிருட்டிணன், "பெரியார் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறார், அவரது தத்துவங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதையே இச்செயல் காட்டுகிறது. தமிழகத்தில் ஒருபோதும் காவி வரமுடியாது என்பதால், பெரியார் சிலையைக் குறிவைக்கிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக்கூறியுள்ளார்.

இதேபோல, பல்வேறு கட்சித் தலைவர்களும் இச்சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். மதிமுக, தபெதிக, தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட பல்வேறு கட்சி, அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள கண்டன ட்விட்டில், ``என் மீது செருப்பு வீசப்பட்ட இடத்தில்தான் சிலை வைக்கப்பட்டு இருக்கிறது என்றவர் தந்தை பெரியார்! தன் படத்தை எரிக்க நினைத்தவருக்கு அச்சிட்டுக் கொடுத்தார்; எதிர்க் கேள்விகளை எழுதியவருக்கு தன் பேனாவைக் கொடுத்தார். சிறியோர்க்கும் சேர்த்தே உழைத்தார் பெரியார்! அதனால் அவர் பெரியார்!" என்றுள்ளார்.

கோவையில் பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றிய விவகாரம் தொடர்பாக  திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்து உள்ளார். அதில், ``தமிழக மக்களின் ஆதரவை எக்காலத்திலும் பெறமுடியாத ஒரு கும்பல் தொடர்ந்து பெரியார் சிலைகளை அவமதித்து வருகிறது. அவர்கள் மீது இந்த அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? மான உணர்வும், சுய மரியாதையும் இல்லாத இந்த அதிமுக அரசு,  தந்தை பெரியாரை அவமதிப்பதைப் பற்றிக் கண்டு கொள்ளாததில் வியப்பு ஏதுமில்லை. சமூக அமைதியைக் கெடுக்கும் நோக்கில் செயல்படும் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள கண்டன ட்விட்டில், ``கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியாரின் சிலை மீது சில நச்சுக்கிருமிகள் காவி சாயத்தை ஊற்றி அவமதிப்பு செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. இதற்குக் காரணமான விஷமிகள் யாராக இருந்தாலும் அவர்களைக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தந்தை பெரியாரின் சிலைகள் மட்டும் தொடர்ந்து அவமதிக்கப்படுகிறது  என்றால், அவரது கொள்கைகள் தமிழகத்தில் கடந்த சில காலமாக ஊடுருவியுள்ள  நச்சுக்கிருமிகள், விஷப்பாம்புகளை  அச்சமடையச் செய்துள்ளன; அதன்விளைவு தான் இது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்!

கொள்கை அடிப்படையில் எதிர்க்கத் துணிவில்லாத  கொரோனாவை விட மோசமான இந்த நச்சுக்கிருமிகள் மிகவும் ஆபத்தானவர்கள்;  சமுதாயத்தில் நஞ்சை பரப்புபவர்கள். அவர்களிடமிருந்து நமது பிள்ளைகளைக் காப்பதும், விழிப்புணர்வூட்டுவதும்  தான் நமது முதல் கடமையாக இருக்க வேண்டும்!

கொள்கை அடிப்படையில் எதிர்க்க முடியாத ஒருவரின் சிலையை அவமதிப்பதும்,  சாயத்தை ஊற்றுவதும் கோழைத்தனமான செயல்கள். கடந்த காலங்களில் இத்தகைய செயல்களால் எதையும் சாதிக்க முடியவில்லை; இனியும் சாதிக்க முடியாது என்பதைக் கோழைகள் உணர வேண்டும் எனக் கூறி உள்ளார்.

விவகாரம் தீவிரமானதைத் தொடர்ந்து, ஒருவர் தானாக முன்வந்து சரண் அடைந்துள்ளார்.

- பெ.மதலை ஆரோன்