தென்னாட்டு ஷாருக்கான் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுவர் சிவகார்த்திகேயன். ஆறிலிருந்து அறுபது வரை என அனைத்து தரப்பு ரசிகர்களையும் தனது நடிப்பால் ஈர்த்து SKவாக திகழ்கிறார். நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த காலத்திலே பலருக்கும் ஹீரோவாக திகழ்ந்த சிவகார்திகேயன், ஹீரோவாகி பல வெற்றி திரைப்படங்களை தந்துள்ளார். தற்போது டாக்டர் மற்றும் அயலான் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 

ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்த டாக்டர் படத்தின் செல்லம்மா என்ற பாடல் நேற்று வெளியானது. இந்தப் பாடலின் வரிகள் இன்றைய இளைஞர்களை கவரும் விதமாக உருவாக்கப்பட்டிருந்த நிலையில் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. 

டிஜிட்டல் காலத்து ரொமான்ஸை கண்முன் கொண்டு வந்துள்ளனர் படக்குழுவினர். நடிகர், தயாரிப்பாளர் என்பதைத் தாண்டி ஒரு சில படங்களில் அவ்வப்போது பாடல்களும் எழுதி வருகிறார் சிவகார்த்திகேயன். கவிஞர் SK தலைகாட்டினால் இளைஞர்களுக்கு கொண்டாட்டம் என்றே கூறலாம். கோலமாவு கோகிலா படத்தில் இவர் எழுதிய கல்யாண வயசு தான் பாடல், ரசிகர்களின் பிலேலிஸ்ட்டை ரூல் செய்து வருகிறது. 

பாடல் வெளியானதும் சிவகார்த்திகேயன், அனிருத் மற்றும் நெல்சன் படக்குழுவுக்கு பலரும் வாழ்த்து கூறி வரும் நிலையில் கவிஞர் கண்ணதாசனின் பேரனும் நடிகருமான ஆதவ் கண்ணதாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், சிவகார்த்திகேயன் கவிஞரே பயங்கர ஃபார்ம்ல இருக்கீங்க போல, செம கேட்சி சாங் அனிருத். அராஜகம் பண்றிங்க நெல்சன் என்று வாழ்த்தி பதிவிட்டார்.

இதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், தயவு செய்து என்னை கவிஞர் என்றெல்லாம் சொல்லாதீர்கள். தாத்தா கனவில் வந்து உங்களை அடிப்பார் என்று அவர் ஸ்டைலில் ரிப்ளை செய்துள்ளார். 

டாக்டர் படத்தை SK ப்ரொடக்ஷன்ஸுடன் இணைந்து KJR நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் ப்ரியங்கா அருள் மோகன் ஹீரோயினாக தமிழில் அறிமுகமாகிறார். வினய், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில்நடிக்கின்றனர். இதுவரை இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளது. கொரோனா காரணமாக படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில் லாக்டவுனில் எடிட்டிங் பணிகள் நடந்து வந்தது. கடைசியாக படத்தின் பிரத்தியேக புகைப்படங்கள் வெளியானது. அடுத்த பாடல் அப்டேட் எப்போது என்று அடிபோட்டு வருகின்றனர் ரசிகர்கள்.