தமிழகத்தில் கொரோனா காரணமாக, பள்ளி கல்லூரிகள் யாவும் கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டு இருக்கின்றது. மீண்டும் அவை எப்போது திறக்கப்படும் என்பது இன்னமும் முடிவு செய்யப்படாமலேயே இருக்கிறது. அரசு சார்பில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிகளை இப்போதைக்குத் திறப்பதற்குச் சாத்தியமில்லை என சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார். 

நேற்றைய தினம் 12 -ம் வகுப்புக்குத் தேவு முடிவுகள் வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பங்களும் இரு தினங்களுக்கு முன் தொடங்கப்பட்டது.

இதற்கிடையில் பள்ளிக்கல்வித் துறையிலும் அடுத்த ஆண்டுக்கான பணிகள் தொடங்கியிருக்கிறது. இப்போதைக்குப் பல பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கியிருப்பதன் நோக்கமும், அதுதான். இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளை அரசு அங்கீகரித்து அதற்கான நெறிமுறைகளை வழங்கியது. கிடைத்த அங்கீகாரத்தை முன்னிறுத்தி, தனியார்ப் பள்ளிகள் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சில தினங்களுக்கு முன்பு அரசிடம் முன்வைத்தது.

இந்தக் கோரிக்கைகளை ஏற்று, தமிழகத்தில் தனியார்ப் பள்ளிகளுக்கு புதிய கல்விக் கட்டணம் அமலுக்கு வர உள்ளதாகத் தனியார்ப் பள்ளிகளுக்குக் கல்விக் கட்டண நிர்ணய குழு அறிவுறுத்தியுள்ளது. அந்தக் கட்டணத்தில், 15% அளவுக்குக் கல்விக் கட்டணம் உயர வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் வரும் 20ம் தேதி முதல் பரிந்துரைகளை ஆன்-லைனில் விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் தனியார்ப் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணம் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்காக, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான கட்டண நிர்ணயக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் டிபிஐ வளாகத்தில் செயல்படுகிறது.

இந்நிலையில், கல்விக் கட்டணம் நிர்ணயித்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த சுமார் 6000 தனியார்ப் பள்ளிகளுக்கு புதிய கல்விக் கட்டணம் அமலுக்கு வர உள்ளதாகத் தனியார்ப் பள்ளிகளுக்குக் கல்விக் கட்டண நிர்ணய குழு அறிவுறுத்தியுள்ளது. வரும் 20ம் தேதி முதல் பரிந்துரைகளைக் கட்டண நிர்ணயக் குழுவின் இணையதளத்தில் விண்ணப்பிக்கவும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக தமிழகத்திலுள்ள 6000 பள்ளிகளுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலமாகத் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

அத்தகவலின் அடிப்படையில், வரும் தினங்களில் தனியார்ப் பள்ளிகள் இதுவரை வசூலித்த கல்விக் கட்டண விவரம், தற்போதைய செலவுகளுக்கு ஏற்ப உயர்த்தப்பட வேண்டிய கல்விக் கட்டணம் மற்றும் எதிர்பார்க்கும் கல்விக் கட்டணம் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

அதன்பின்னர் பள்ளி நிர்வாகிகளை நேரில் அழைத்து, அவர்களின் பரிந்துரைகளை ஆய்வு செய்து அடுத்த மூன்று கல்வியாண்டுகளுக்கான புதிய கல்விக் கட்டணத்தை அரசின் கட்டண நிர்ணயக் குழு நிர்ணயம் செய்யும். 

வரும் கல்வியாண்டில் பள்ளி தொடங்குவதற்கு முன்பாக இந்த புதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் எனத் தமிழக அரசுக்கு நீதிமன்றம் கூறியிருக்கிறது.

ஒவ்வொரு முறையும் கல்விக் கட்டண மறுசீரமைப்பின்போது, ஏற்கெனவே உள்ள கட்டணத்தைவிடக் குறைந்தபட்சம் 15 சதவீதம் உயர்த்தப்படுவது இதுவரையிலான வழக்கமாக இருக்கிறது. பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட மிகப்பெரிய பள்ளிகளுக்கு அதிகபட்சம் 25 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. எனவே, இந்த முறையும் குறைந்தபட்சம் 15 சதவீதம் கல்விக் கட்டணம் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனியார்ப் பள்ளிகள் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டணம் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, உயர்நீதிமன்றம் சார்பில் தமிழக அரசுக்குக் கல்விக் கட்டணம் தொடர்பாக நிபுணர் குழு அமைத்து முடிவெடுக்கலாம் என அறிவுரை சொல்லப்பட்டிருந்தது. இந்த யோசனையைத் தமிழக அரசு இப்போது ஏற்றுக் கொண்டிருக்கிறது. இதையடுத்து கல்விக் கட்டணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழு முடிவெடுக்கும் எனத் தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
 
தமிழக அரசு சார்பில், ஏற்கெனவே தனியார்ப் பள்ளிகளுக்கு தற்போதைய சூழலில் 75% கல்விக் கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என்றும், அதையும் மூன்று தவணைகளாகக் கட்டணத்தை வசூலித்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டிருப்பது. இதைத் தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

அதேநேரம் ஊரடங்கு காலம் மற்றும் பொருளாதார பின்னடைவை மனதில் கொண்டு, பள்ளி கட்டணம் தாமதமாகச் செலுத்தினாலும் மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் கூடாது என்றும், ஊரடங்கு காலத்தில் 25%, பள்ளிகள் திறக்கும் போது 25%, பள்ளிகள் திறந்து 3 மாதம் கழித்து 25% வசூலித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுவும் நீதிமன்றத்தில் அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.

- பெ.மதலை ஆரோன்