சென்னையில் அழகு நிலையம் என்ற பெயரில் பாலியல் தொழில் கொடிக்கட்டி பறப்பதாகக் காவல் துறை துணை ஆணையருக்கு வாட்ஸ்ஆப்பில் புகார் வந்த நிலையில், ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தி வந்த 3 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

சென்னை துரைப்பாக்கம் திருமலை நகர் விரிவாக்கம் பகுதியில் ஸ்பா என்ற பெயரில், பாலியல் தொழில் வெகு நாட்களாக நடந்து வந்துள்ளது. இது குறித்து, அந்த பகுதி மக்கள் பலரும் தெரிய வந்தது, 

எனினும், கொரோனா காலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பொது மக்கள் யாவரும் வீடுகளில் முடங்கி இருக்கும் நிலையில், இந்த ஸ்பாவில் மட்டும் பாலியல் தொழில் கொடிகட்டிப் பறந்துள்ளது. இதன் காரணமாக, இவர்கள் மூலம் அந்த பகுதியில் கொரோனா பரவுமோ என்று அச்சம் அடைந்த அந்த பகுதி மக்கள் பீதியிலிருந்தனர்.

இதனிடையே, சென்னை அடையாறு காவல் துறை துணை ஆணையர் விக்ரன், தனது காவல் எல்லைக்கு உட்பட்ட மக்கள் தன்னை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கும் வகையில், தனது செல்போன் நம்பரை சமூக வலைத்தள பக்கத்தில் முன்பே வெளியிட்டு இருந்தார். அந்த தொலைப்பேசி எண், துரைப்பாக்கம் பகுதி வாழ் மக்களின் சமூக வலைத்தள பக்கத்தில் உலா வந்துகொண்டு இருந்தது.

இதையே நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்ட அந்த பகுதி மக்கள் சிலர், காவல் துறை துணை ஆணையர் விக்ரன் வாட்ஸ்ஆப் நம்பருக்கு, தங்கள் பகுதியில் நடக்கும் பாலியல் தொழில் குறித்து புகார் அளித்தனர்.

இதைக் கவனித்த காவல் துறை துணை ஆணையர் விக்ரன், இது குறித்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்தார். அதன் படி, துரைப்பாக்கம் போலீசார் விசாரணையில் இறங்கினர். 

அப்போது, குறிப்பிட்ட அந்த ஸ்பாவிற்கு போலீசார் சிலர் மப்டியில் சென்றுள்ளனர். அவர்களை கஷ்டமர் என்று நினைத்த ஸ்பா சென்டர் பெண் ஊழியர்கள் அவரிடம் பாலியல் ரீதியாகத் தூண்டிவிட்டு, பாலியல் இச்சைக்குக் கூடுதலாகப் பணம் கேட்டதாகத் தெரிகிறது.

இதனையடுத்து, அங்கு பாலியல் தொழில் நடப்பதை உறதி செய்துகொண்ட போலீசார், அங்கேயே அந்த பெண்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர். 

விசாரணையில், அந்த ஸ்பா சென்டரில் 3 பெண்கள் பாலியல் தொழில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. அந்த 3 பெண்களுமே, ஸ்பா சென்டர் வைத்து நடத்தும் 3 பேரால் மிரட்டப்பட்டே, இந்த தொழிலுக்குக் கட்டாயப்படுத்தி அழைத்து வரப்பட்டதும் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து, அந்த ஸ்பாவை நடத்தி வந்த தரகர்கள் அசோக், ஹேமதுல்லா, ராஜராஜன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

மேலும், மிரட்டலுக்குப் பயந்து அந்த ஸ்பாலில் பாலியல் தொழில் செய்து வந்த 3 பெண்களையும் போலீசார் மீட்டனர். அத்துடன், மீட்கப்பட்ட 3 பெண்களையும், அந்த பகுதியில் உள்ள அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

அதேபோல், கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாட்ஸ்ஆப் புகாருக்கு விரைந்து நடவடிக்கை எடுத்த சென்னை அடையாறு காவல் துறை துணை ஆணையர் விக்ரனுக்கும், அப்பகுதி மக்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும், இந்த ஊரடங்கு காலத்திலும், சென்னை துரைப்பாக்கம் பகுதியில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தி வந்த சம்பவம், சென்னையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.