தற்போது இருக்கும் சினிமா ட்ரெண்டில் ஆந்தாலஜி மற்றும் வெப் சீரிஸ் ரசிகர்களின் மனதில் சிறப்பான ஓர் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. அதற்கு ஏற்றார் போல் ஆன்லைன் ஓடிடி தளங்கள் அமைந்துள்ளது. தங்களது சிறிய நேர படைப்புகளை டிஜிட்டல் தளத்தில் வெளியிட்டு புதிய பரிமாணம் எடுத்து வருகின்றனர் இயக்குனர்கள். மூன்று நான்கு இயக்குனர்கள் இணைவதால், வித்தியாசமான கதைக்களமும் காட்சிகளையும் பார்த்து பரவசமடைகின்றனர் ரசிகர்கள். 

இந்நிலையில் விக்டிம் என்ற ஆந்தாலஜியின் அறிவிப்பு வெளியானது. நடிகர் சிவகார்த்திகேயன் இதை வெளியிட்டார். இதில் இயக்குனர்கள் வெங்கட் பிரபு, பா. ரஞ்சித், சிம்பு தேவன் மற்றும் ராஜேஷ் இணைந்து அவர்களது படைப்புக்களை சமர்பிக்கவுள்ளனர். பிளாக் டிக்கெட் தயாரிப்பு நிறுவனம் இதை தயாரிக்கிறது. ஆக்சஸ் பிலிம் ஃபேக்டரி இதை வழங்குகிறது. விரைவில் இதில் நடிக்கும் நடிகர்களின் விவரமும், இசையமைப்பாளர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் விவரமும் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வெங்கட் பிரபு கைவசம் மாநாடு திரைப்படம் உள்ளது. சிலம்பரசன் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் துவங்கும் என்று அறிவிப்பு வெளியானது. லைவ் டெலிகாஸ்ட் என்கிற திகில் வெப் சீரிஸையும் வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். இதில் காஜல் அகர்வால், கயல் ஆனந்தி, வைபவ் ஆகியோர் இதில் நடிக்கின்றனர். பேய் இருக்கும் வீட்டுக்குள் நுழையும் திரைப்படக் குழுவினர் என்ன அனுபவங்களை சந்திக்கின்றனர் என்பதைப் பற்றிய தொடர் இது. சமீபத்தில் இந்த வெப்சீரிஸின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் சல்பேட்டா பரம்பரை. வட சென்னையில் உள்ள இளைஞன் தனது பாக்ஸிங் கனவுகளை எப்படி நிஜமாக்கிக்கொள்கிறான் என்பதைப் பற்றிய கதையாக இப்படம் அமையவுள்ளது. ஆர்யா ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் கலையரசன், ஷபீர், துஷாரா ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

சிம்பு தேவன் கைவசம் கசட தபற திரைப்படம் உள்ளது. அவருக்கே உண்டான ஸ்டைலில் இந்த ஆந்தாலஜியில் அசத்துவார் என்று ஆவலில் உள்ளனர் சினிமா பிரியர்கள். இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் கடந்த ஆண்டு Mr.லோக்கல் திரைப்படம் வெளியானது. சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த இந்த படத்திற்கு பிறகு ராஜேஷ் இந்த ஆந்தாலஜி சீரிஸை இயக்கவுள்ளார்.