உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. முயற்சிகள் ஒருபுறம் இருக்க, வைரஸின் தாக்கம் வேகமாக இருக்கிறது. இந்த தொற்று காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. தினசரி செய்தி சேனல்களை ஆன் செய்தால் கொரோனா பற்றிய செய்திகள் தான் அதிகம். இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. 

டாக்டர் ராஜசேகர் தமிழில் இதுதான்டா போலீஸ் உள்ளிட்ட பல படங்கள் மற்றும் தெலுங்கில் ஏராளமான படங்களிலும் நடித்திருக்கிறார். இவரது மனைவி ஜீவிதாவும் தமிழில் தப்புக்கணக்கு, தர்ம பத்தினி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர்களது மகள் ஷிவானி தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நடிகர் ராஜசேகர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கடந்த 16 ஆம் தேதி தகவல்கள் வெளியாயின. தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது உண்மைதான் என்று கடந்த 17 ஆம் தேதி உறுதிப்படுத்தினார் ராஜசேகர். சிறந்த நடிகரான இவர், சீரான மருத்துவரும் கூட. 

இது குறித்து ராஜசேகர், என் மனைவி ஜீவிதா, குழந்தைகள் மற்றும் எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உண்மைதான். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறோம். மகள்கள் குணமாகிவிட்டார்கள். நானும் ஜீவிதாவும் நன்றாக இருக்கிறோம். விரைவில் வீடு திரும்புவோம் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து அவர்கள் நலம்பெற ஏராளமான ரசிகர்கள் பிரார்த்தனை செய்வதாகக் கூறினர். இந்நிலையில், அவர் மகள் ஷிவாத்மிகா, கொரோனாவுடன் அப்பா கடுமையாகப் போராடி வருவதாகவும் விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்திக்க வேண்டும் என்றும் ட்விட்டரில் கூறியிருந்தார்.

இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர் உடல் நிலை பற்றி வதந்திகள் கிளம்பின. இது பரபரப்பானது. பின்னர் மற்றொரு ட்வீட்டில், தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள், அவர் கவலைக்கிடமான நிலையில் இல்லை. நன்றாக இருக்கிறார். உடல்நலம் பெற்று வருகிறார். உங்கள் பிரார்த்தனைகள் தேவை. பீதியடைய வேண்டாம் என்று ஷிவாத்மிகா கூறினர்.

தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், அவர் உடல் நிலை சீராக உள்ளது. நோயில் இருந்து மீண்டும் வருகிறார். சிகிச்சைக்கு நன்றாக ஒத்துழைப்பு கொடுக்கிறார். மருத்துவக் குழுவால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்று கூறப்பட்டுள்ளது.