கடந்த 1991-ம் ஆண்டு திரைப்பயணத்தை துவங்கியவர் நடிகை ரவீனா டாண்டன். பாலிவுட் திரையுலகில் கொடி கட்டி பறக்கும் ரவீனா, தமிழ் தெலுங்கு, கன்னடம், பெங்காலி என பிற மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களை ஈர்த்தார். 2001-ம் ஆண்டு கமல் ஹாசன் நடித்து வெளியான ஆளவந்தான் படத்தில் இவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. இந்தப் படத்தை அடுத்து அவர் தமிழில் கவனம் செலுத்தவில்லை. இந்தியில் மட்டுமே நடித்து வந்தார்.

இப்போது, யஷ் நடித்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகமான கே.ஜி.எஃப் சாப்டர் 2 படத்தில், நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகிறது. பிரசாந்த் நீல் இயக்கும் இந்தப் படத்தில் அவர் அரசியல்வாதியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரவீனா டாண்டன், அதில் பரபரப்பு கருத்துகளைத் தெரிவித்து வருவார். இந்நிலையில் அவர் பெயரில் ஒருவர் போலியாக ட்விட்டர் கணக்கை உருவாக்கி உள்ளார். அதில் மும்பை போலீசை இழிவுபடுத்தி கருத்துக்களை வெளியிட்டுள்ளார் மர்ம நபர் ஒருவர். மும்பை காவல்துறைத் தலைவர் பரம்பீர் சிங்கின் புகைப்படங்களை மார்பிங் செய்தும் அவதூறு கருத்துக்களையும் வீடியோவாக பதிவிட்டுள்ளார். கூடவே மராத்தி மொழியையும் மராத்தி பேசுபவர்களையும் அவதூறாகக் குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி அறிந்த நடிகை ரவீண்டா டாண்டன் அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து அந்த அடையாளம் தெரியாத நபர் மீது, சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார் ரவீணா. போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த நபரை தேடி வருகின்றனர். மாநில அரசு மற்றும் போலீசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இதை சிலர் செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

இந்தப் புகாரை அடுத்து, அந்த போலி ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. பிரபலங்களின் பெயரில், இதுபோன்ற போலி கணக்குகளை உருவாக்கி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவது அதிகரித்து வருகிறது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.