தமிழகம் முழுவதும் இன்று முதல் கூடுதலாக 2 மணி நேரம் டாஸ்மாக் கடைகள் இயங்கும் என்று தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் 
கொரோனா பரவல் அதிகரித்து வந்ததன் காரணமாகத் தமிழகத்தில்  மதுக் கடைகள் மூடப்பட்டன. இதையடுத்து மே 7,8 ஆகிய தேதிகளில் மட்டும் கடைகள் திறக்கப்பட்டன. உரியப் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி தொடரப்பட்ட வழக்கில் டாஸ்மாக் கடைகளை மீண்டும் மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை வாங்கியது. இந்த உத்தரவைத் தொடர்ந்து சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் மே 16ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. இதையடுத்து சென்னையில் வைரஸ் தொற்று பரவல் குறைந்து வந்த நிலையில் ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் அங்கும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால், பகல் 12 மணிக்குத் திறக்கப்படும் கடைகள் 8 மணிக்குள் மூடப்பட்டு வந்தன.

தற்போது நவம்பர் மாத ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் நவம்பர் 1 ஆம் தேதி முதல் நண்பகல் 12 மணியிலிருந்து இரவு 10 மணி வரை இயங்கும் என்று தெரிவித்துள்ளது.