இயற்கை, ஈ, பேராண்மை போன்ற சிறந்த படைப்புக்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லாபம். விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளனர். சமூக அக்கறை மிகுந்த கதையை பேசும் ஜனநாதனின் திரைமொழிக்கு தனி ரசிகர்கள் உண்டு. புறம்போக்கு படத்தில் விஜய் சேதுபதியை இயக்கிய ஜனநாதன், இரண்டாவது முறையாக லாபம் படத்தில் இயக்கி வருகிறார். 

ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாகவும், ஜகபதி பாபு, சாய் தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்திலிருந்து யாழா என்ற பாடலின் முன்னோட்டம் வெளியாகி அசத்தியது. ஸ்ருதி ஹாசன் பாடியிருந்த இந்த பாடல் வரிகளை யுகபாரதி எழுதியிருந்தார். 

படப்பிடிப்பு முடிந்த வரை இந்த படத்தின் டப்பிங் பணிகளை முடித்தனர் படக்குழுவினர். பாதுகாப்பான முறையில் ஸ்டுடியோவில் முகக்கவசம் அணிந்தபடி படக்குழுவினர் டப்பிங் பணிகளை செய்துள்ளனர். சமீபத்தில் படத்தின் ட்ரைலர் காட்சிகள் வெளியாகி ட்ரெண்டானது. படத்தின் மீதம் உள்ள படப்பிடிப்பு கடந்த வாரம் துவங்கியது. லாக்டவுனுக்கு பிறகு நடைபெற்ற படப்பிடிப்பில் நடிகை ஸ்ருதிஹாசன் மற்றும் ஜகபதி பாபு கலந்து கொண்டனர். 

கடந்த மாத இறுதியில் துவங்கிய படப்பிடிப்பில் விஜய்சேதுபதி, நடிகர் கலையரசன் மற்றும் நடிகர் டேனியல் ஆனி போப் படப்பிடிப்பில் இணைந்தனர். முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாக படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு தளத்தில் இருந்து பிரத்தியேக புகைப்படங்கள் வெளியானது. 

இந்நிலையில் தெருக்குரல் அறிவு படத்தில் ஓர் பாடலுக்கு வரிகள் எழுதியுள்ளார். இதுகுறித்து படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். தெருக்குரல் அறிவு சூரரைப் போற்று படத்தில் மாறா தீம் பாடலும், மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி ரைடு பாடலின் வரிகளையும் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கமர்சியல் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தாலும், வில்லன் ரோல், வித்தியாசமான கதை, வித்தியாசமான கதாபாத்திரம் என தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் குறை வைக்காமல் அசத்தி வருகிறார் விஜய் சேதுபதி. கடந்த வாரம் க.பெ. ரணசிங்கம் படம் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்துள்ள விஜய் சேதுபதியின் நடிப்பை காண ஆவலாக உள்ளார் அவரது ரசிகர்கள். 

இது தவிர்த்து மணிகண்டன் இயக்கிய கடைசி விவசாயி, சீனு ராமசாமியின் மாமனிதன், வெங்கட கிருஷ்ணா ரோகந்தின் யாதும் ஊரே யாவரும் கேளிர்,அமீர்கானுடன் லால் சிங் சத்தா போன்ற படங்கள் விஜய் சேதுபதி கைவசம் உள்ளது. நலன் குமாரசாமி இயக்கத்தில் குட்டி லவ் ஸ்டோரி என்ற ஆந்தாலஜி படத்தில் நடித்துள்ளார் விஜய்சேதுபதி. டாப்ஸியுடன் நடித்த அனபெல் சுப்ரமணியம் படத்தில் நடித்துள்ளார்.