நிலம் வாங்கி தருவதாகக் கூறி நடிகர் சூரியிடம், நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை 2.70 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்துகொண்டு இருக்கிறார் நடிகர் சூரி. இதே போல், நடிகர் விஷ்ணு விஷாலும் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார்.

நடிகர் சூரி, நடிகர் விஷ்ணு விஷால் இருவருமே “வெண்ணிலா கபடிக்குழு” படம் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்தனர். தொடர்ந்து அவர்கள் இருவரும் “குள்ளநரி கூட்டம்”, “ஜுவா”, “வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்”, “மாவீரன்”, “கதாநாயகன்” உள்ளிட்ட படங்களில் ஒன்றாகச் சேர்ந்து இருவரும் சேர்ந்து நடித்து வந்ததின் மூலமாக, தங்களது நட்பை மேலும் நெருக்கமாக்கிக்கொண்டு இருவரும் இன்னும் நெருக்கமான நண்பர்களாக அறியப்பட்டனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், நிலம் வாங்கி தருவதாக கூறி நடிகர் சூரியிடம், நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை 2.70 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது, தமிழ் சினிமாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு “வீர தீர சூரன்” என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தை அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். இந்த படத்தில், நடிகர் சூரி நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்தது தொடர்பாக அவருக்கு 40 லட்சம் ரூபாய் சம்பள பணம் பாக்கி இருந்து உள்ளது. இதனால், தனக்கு சேர வேண்டிய சம்பள பாக்கி பணத்தைக் கேட்டு நடிகர் சூரி, பல முறை “வீர தீர சூரன்” படத்தின் தயாரிப்பாளரிடம் வலியுறுத்தி வந்து உள்ளார். ஆனால், இந்த படம் சரியாக போகாத நிலையில், அந்த படத்தின் தயாரிப்பாளர்களும் சிரமப்பட்டு உள்ளனர்.

அதே நேரத்தில், “வீர தீர சூரன்” படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் ஆகியோர் நடிகர் சூரியிடம் சம்பள பாக்கி தருகிறேன், தருகிறேன் என்று கூறிக்கொண்டே, கடைசி வரை அவர்கள் சம்பள பாக்கியைத் தரவில்லை.

மேலும், தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் ஆகியோர் நடிகர் சூரியிடம், “நீங்கள் மேலும் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் பணம் தந்தால், நிலம் வாங்கி தருவதாகக் கூறி உள்ளனர். அதன்படி, அவர்களை நம்பிய நடிகர் சூரி, அந்த பணத்தை அவர்களிடம் கொடுத்து உள்ளார். ஆனால், அவர்கள் அந்த பணத்திற்கான நிலத்தையும் தராமல், கொடுத்த பணத்தையும் தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்ததோடு மோசடி செய்துள்ளனர். 

இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துகொண்ட நடிகர் சூரி, அவர்களிடம் மீண்டும் தன்னுடைய பணத்தை கேட்டு வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், அவர்கள் தரப்பில் எந்த பதிலும் இல்லாமல் இருந்துள்ளது. இதனையடுத்து, சட்ட ரீதியான நடவடிக்கையை நாம் மேற்கொள்ளலாம் என்று முடிவு செய்த நடிகர் சூரி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

ஆனால், போலீசார் இந்த புகாரை கண்டுகொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது. போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நடிகர் சூரி, சிறிது காலம் காத்திருந்து உள்ளார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், இனியும் தாமதம் செய்தால், இழந்த பணத்தை மீண்டும் பெற முடியாது என்று நினைத்து, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், “நிலம் வாங்கி தருவதாகக் கூறி நடிகர் சூரியிடம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் தீயணைப்புத்துறை டி.ஜி.பியும், நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையுமான ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்பு வேல் ராஜன் மீதும், நடிகர் சூரி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என்று, நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. 

நீதிமன்ற உத்தரவை அடுத்து, சென்னை அடையார் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். இதனால், தமிழ் சினிமாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.