மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலுக்கு இடையே ஒரு மத்திய அமைச்சராக உணவுப்பொருட்கள் வினியோகம் சீராக நடைபெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வந்தார் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான். ஆனால், அந்த நேரத்தில் அவருக்கு உடல் நிலை திடீரென பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து, அவர் டெல்லியில் உள்ள போர்ட்டிஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து. அவரது உடல் நிலை மேலும் மோசமடைந்ததால், அவருக்கு கடந்த 3 ஆம் தேதி இரவு இதய அறுவை நடைபெற்றது. அத்துடன், அடுத்த சில நாட்களில் தேவைப்பட்டால் அவருக்கு மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய நேரிடும் என்றும் மருத்துவர்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் அவரது உடல் நிலை திடீரென மேலும் மோசமடைந்தது. தீவிர சிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. இந்த தகவலை, மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் மறைவு செய்தியை, அவரது மகன் சிராக் பஸ்வான், தனது டிவிட்டரில் முறைப்படி தெரிவித்தார். 

பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ராம்விலாஸ் பஸ்வான், “லோக் ஜனசக்தி கட்சி”யின் தலைவராக இருந்து வந்தார். கடந்த காங்கிரஸ் ஆட்சியிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்த ராம் விலாஸ் பஸ்வான், மத்திய அமைச்சராக பதவி வகித்து உள்ளார். ரயில்வே, விவசாயம், தகவல் தொடர்பு என்று பல்வேறு துறைகளின் அமைச்சராக ராம் விலாஸ் பஸ்வான் இதுவரை பதவி வகித்து இருக்கிறார். 

மேலும், இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளாக அரசியலில் இருந்து வந்த ராம் விலாஸ் பஸ்வான், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த என்பவதும், அந்த சமூகத்தின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே, மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பா குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்து உள்ள இரங்கல் செய்தியில், “நமது நாடு ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவரை இழந்து விட்டது. அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருந்தார். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

அதேபோல், “நான் என்னுடைய நண்பனை, மதிப்புமிக்க சக அரசியல் தலைவரை இழந்துவிட்டேன். அவரது மறைவால் நமது நாட்டில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அது ஒரு போதும் நிரப்பப்படாது. ராம் விலாஸ் பஸ்வானின் மறைவு எனக்குத் தனிப்பட்ட இழப்பு” என்று, ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

“ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள், வலுவான அரசியல் குரலை இழந்து விட்டனர்” என்று, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அரங்கல் கூறியுள்ளார்.

“ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளியாகத் திகழ்ந்தவர் ராம்விலாஸ் பஸ்வான்” என்று, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.