ஹத்ராஸ் இளம் பெண் பாலியல் பலாத்கார வழக்கில் திடீர் திருப்பமாக, “இளம் பெண்ணை குடும்பத்தினரே கொன்று நாடகம்” ஆடுவதாக, கைது செய்யப்பட்ட 4 கைதிகளில் ஒருவர் கடிதம் எழுதி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நாக்கு அறுக்கப்பட்ட 19 வயது இளம் பெண் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். 

இதனையடுத்து, இந்த வழக்கை விரைந்து நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அம்மாநில உள்துறை செயலர் பக்வான் ஸ்வரூப் தலைமையில், அம்மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அமைத்தார். அதே நேரத்தில், அந்த சிறுமியின் கிராமத்திற்குச் செல்ல ஊடகங்கள் உட்பட அனைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

அதன் தொடர்ச்சியாக, உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறுவதற்கு இன்று காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் சென்றனர். அப்போது, அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு அவர்கள் மட்டும் தனியாகச் சென்று பார்த்து ஆறுதல் கூறிவிட்டு வந்தனர்.

அந்த நேரம் பார்த்து, ஹத்ராஸ் இளம் பெண் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக பாஜக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி அந்த மாவட்ட போலீசாரிடம் அவர்கள் மனு அளித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 4 பேரில் சந்தீப் தாகூர் என்பவரும் ஒருவர். இதனால், குற்றவாளிகளைத் தூக்கில் போட வேண்டும் என்றும், நாடு முழுவதும் இருந்தும் பலரும் குரல் கொடுத்தனர்.

அதன் தொடர்ச்சியாக, “சிறையில் அடைக்கப்பட்ட 4 பேரில் ஒருவரை நன்றாக எங்களுக்குத் தெரியும்” என்று பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் குடும்பத்தினர் போலீசாரிடம் கூறினார். 

இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டு உள்ள 4 கைதிகளில் ஒரு கைதியான சந்தீப் தாகூர் என்பவர், “ஹத்ராஸ் போலீசாருக்கு கடிதம் ஒன்றை எழுதி” உள்ளார். 

அந்த கடிதத்தில், “நானும், அந்த இளம் பெண்ணும் நல்ல நண்பர்கள். நாங்கள் இருவரும் நேரில் சந்திப்பதுடன், போனிலும் அடிக்கடி பேசிக்கொள்வோம். எங்களது நட்பு அவர்களது குடும்பத்தினருக்குப் பிடிக்கவில்லை. சம்பவத்தன்று, வயலில் வேலைபார்த்துக்கொண்டு இருந்த அந்த பெண்ணை சந்திக்கச் சென்றேன். அங்கே அவரது தாயாரும், சகோதரர்களும் இருந்தனர். என்னை வீட்டுக்குப் போகும்படி அந்த பெண் கேட்டுக் கொண்டதால், நானும் வீட்டிற்குத் திரும்பி வந்து விட்டேன். அதன் பிறகு தான், எங்களது நட்பு பிடிக்காமல் ஆத்திரமடைந்த பெண்ணின் தாயாரும், சகோதரர்களும் அவரை அடித்து, கடுமையாகக் காயப்படுத்தி உள்ளனர் என்று அவரது கிராம மக்களே கூறிய பிறகு தான் எனக்கு தெரிய வந்தது” என்று கூறியுள்ளார்.

“அந்த பெண்ணை நான் எப்போதும் அடித்தது கிடையாது. அவரிடம் தவறாக எதுவும் நடந்து கொள்ளவும் இல்லை. என் மீதும், மற்ற 3 பேர் மீதும் அந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர்கள் தவறாகப் பழி சுமத்தி சிறைக்கு அனுப்பி வைத்து விட்டனர். நாங்கள் அனைவரும் ஒன்றுமறியாத அப்பாவிகள். நீங்கள் விசாரணை மேற்கொண்டு, எங்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்” என்றும், அவர் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், “சந்தீப்புடன், அந்த இளம் பெண்ணின் சகோதரர் தொடர்பில் இருந்துள்ளார்” என்பது தொலைப்பேசி பதிவுகள் மூலமாகத்  தெரிய வந்துள்ளது. இதனால், இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக இந்த கடிதம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால், இந்த வழக்கு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.