சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன், நிதி அகர்வால், பாரதிராஜா, முனீஷ்காந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ஈஸ்வரன் திரைப்படம், கடந்த 14ம் தேதி வெளியானது . சிம்பு ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளியாகி உள்ள இப்படத்துக்கு தமன் இசையமைத்திருக்கிறார்.

பல்வேறு தடைகளைத் தாண்டி இப்படம் வெளியாகியுள்ள சூழலில், சிம்புவின் அறிமுகம், கிரிக்கெட் விளையாடும் காட்சி, பாம்பு பிடிக்கும் காட்சிகள் ரசிகர்களின் ஏகோபித்த கரவொலியைப் பெற்றுள்ளன.

திரைப்படங்களை இயக்குவதை குறைத்துக் கொண்டுள்ள இயக்குநர் பாரதிராஜா, இந்த படத்தில் பெரியசாமி என்ற கதாபாத்திரமாக நடித்து கதைக்கு வலு சேர்த்திருக்கிறார். நிதி அகர்வாலும், நந்திதாவும் தங்கள் பங்குக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். எனினும் நந்திதா இடம்பெற்றுள்ள காட்சிகள் சற்று குறைவாக இருப்பதாக ரசிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எளிமையான தோற்றத்துடன் சிம்புவின் கதாபாத்திரத்தை நன்றாகவே வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.

பால சரவணனும், முனிஷ்காந்தும் நகைச்சுவை காட்சிகளில் கலக்கியுள்ளனர். நீ அசுரன்னா.... நான் ஈஸ்வரன் என சிம்பு பேசும் பஞ்ச் டயலாக் திரையரங்கை அதிர வைக்கிறது. பொங்கலை முன்னிட்டு விஜயின் மாஸ்டர் படம் திரைக்கு வந்தாலும், சிம்புவின் ஈஸ்வரன் படத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முதல்நாளில் 5 கோடி ரூபாயை வசூலித்துள்ள இப்படம், மேலும் வசூலை அள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஈஸ்வரன் வெற்றியை கொண்டாடும் வகையில் பொங்கல் சீர் தந்து வருகின்றனர் படக்குழுவினர். திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள், படக்குழுவினர், ப்ரோடக்ஷன் யூனிட் மெம்பர்கள் என அனைவருக்கு பொங்கல் சீர் வரிசை வைத்துள்ளது ஈஸ்வரன் படக்குழு. அந்த வரிசையில் மாநாடு இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு பொங்கல் பரிசு வழங்கி இன்பதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் ஸ்டுடியோவில் இருந்து வெங்கட் பிரபு வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. 

சமீபத்தில் மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. அரசியல் மாநாடு நடைபெறும் கூட்டத்தில் கையில் துப்பாக்கியோடு செல்கிறார் சிலம்பரசன். அதன் பின் கட்சி கூட்டத்தில் குண்டு வெடிப்பது போன்ற காட்சி மோஷன் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. மோஷன் போஸ்டரில் இடம்பெற்ற யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை ரசிகர்களின் இதயத்தை அதிர வைக்கிறது. 

கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்க SJ சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும் SA சந்திரசேகர், கருணாகரன், உதயா, சுப்பு பஞ்சு, டேனியல் பாப், பிரேம்ஜி, YG மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா ஆகியோர் நடிக்கின்றனர். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.