கனா கண்டேன் படத்தின் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானவர் நடிகர் பிரித்விராஜ். அதன் பின் பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, நினைத்தாலே இனிக்கும், அபியும் நானும், ராவணன் போன்ற படங்களில் நடித்து அவருக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். மலையாளத்தில் முன்னணி ஸ்டாராக இருக்கும் பிரித்விராஜ் மோகன்லால் நடிப்பில் லூசிஃபர் என்ற படத்தையும் இயக்கியுள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அய்யப்பனும் கோஷியும் என்ற சூப்பர் ஹிட் திரைப்படம் வெளியானது. 

ஆடு ஜீவிதம் படப்பிடிப்பிற்காக ஜார்டன் சென்றவர், கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக, படக்குழுவுடன் அங்கேயே சிக்கி கொண்டார். அதன் பின் பத்திரமாக சொந்த ஊர் திரும்பிய கதை அனைவரும் அறிந்ததே. தற்போது மிக பிரம்மாண்ட திரைப்படத்தை திரையுலகிற்கு அளிக்கவுள்ளார் பிரித்விராஜ். 

இயக்குனர் ஆர்.எஸ். விமல், மெய் நிகர் தொழில்நுட்பத்தில் புதிய படம் ஒன்றை உருவாகவுள்ளதாக செய்திகள் வெளியானது. மகாவீர் கர்ணா படத்தைத் தொடர்ந்து தர்ம ராஜ்யா என்ற திரைப்படத்தை இதே போல மெய் நிகர் தொழில்நுட்பத்தில் படம்பிடிக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். கோகுல்ராஜ் பாஸ்கர் இயக்கும் இந்தப் படத்தை ப்ரித்விராஜே தனது மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து தயாரிக்கிறார். 

தற்போது இவர் ஜனகணமன என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தை டிஜோ ஜோஸ் ஆண்டனி என்பவர் இயக்கி வருகிறார். இது இவரது இரண்டாவது படமாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் வைத்து அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த தீர்மானிக்கப்பட்டது. 

இதையடுத்து நடந்த பரிசோதனையில் நடிகர் பிருத்விராஜுக்கும், டைரக்டர் டிஜோ ஜோஸ் ஆண்டனிக்கும் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டது. படப்பிடிப்பில் கலந்துகொண்ட சக கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் பிரித்விராஜ். அவர் விரைவில் குணமடைய வேண்டுமென்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.